கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2 தமிழர்களின் விடுதலைக்கு கருணை மனு தாக்கல் செய்யப்படும் சுஷ்மா சுவராஜ் தகவல்


கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 2 தமிழர்களின் விடுதலைக்கு கருணை மனு தாக்கல் செய்யப்படும் சுஷ்மா சுவராஜ் தகவல்
x
தினத்தந்தி 9 Jan 2017 9:00 PM GMT (Updated: 2017-01-10T01:27:13+05:30)

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள 2 தமிழர்களை விடுவிக்க கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். பெண் கொல்லப்பட்ட வழக்கு விழுப்புரத்தை சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன், விருதுநகரை சே

புதுடெல்லி

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள 2 தமிழர்களை விடுவிக்க கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

பெண் கொல்லப்பட்ட வழக்கு

விழுப்புரத்தை சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன், விருதுநகரை சேர்ந்த செல்லத்துரை பெருமாள் ஆகியோர் அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் வேலைக்கு சென்றிருந்தனர். அங்கு 4 ஆண்டுகளுக்கு முன் நடந்த பெண் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர்களுக்கு கத்தார் சுப்ரீம் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.

இந்த தமிழர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி இவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இதற்கான கோர்ட்டு நடவடிக்கைகளுக்காக ரூ.9.50 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்தார்.

இதைப்போல நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவருமான எச்.வசந்தகுமாரும், இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மேல்முறையீடு தள்ளுபடி

2 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அங்குள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த மற்றொரு தமிழரான சிவகுமார் அரசனின் சிறைத்தண்டனையை 15 ஆண்டுகளாக குறைத்தது.

இந்த கொலை வழக்கு குறித்த விவரத்தை அளிக்குமாறு கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி இந்த வழக்கு மற்றும் தண்டனை குறித்த விவரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து 2 பேரின் குடும்பங்கள் சார்பில் கருணை மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘தமிழகத்தை சேர்ந்த அழகப்பா சுப்பிரமணியன் மற்றும் செல்லத்துரை பெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்த அறிக்கையை பெற்றுள்ளேன். இந்த வழக்கில் 2 பேரின் குடும்பத்தினர் சார்பில் கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கு உதவுமாறு தமிழக அரசை எங்கள் தூதரகம் கேட்டுக்கொண்டு உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

41 இந்திய மாலுமிகள்

இதைப்போல அமீரகத்தின் அஜ்மான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள 4 கப்பல்களில், தமிழகம், கேரளா, பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட இந்தியா மாநிலங்களை சேர்ந்த 41 மாலுமிகள் சிக்கியுள்ளனர். இதில் 2 கப்பல்கள் பழுதடைந்து மூழ்கும் ஆபத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த 41 இந்திய மாலுமிகளையும் மீட்க நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறும் அமீரக அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story