மின்வினியோக திறனை மேம்படுத்தும் மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்தில் தமிழகம் இணைந்தது டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து


மின்வினியோக திறனை மேம்படுத்தும் மத்திய அரசின் ‘உதய்’ திட்டத்தில் தமிழகம் இணைந்தது டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 9 Jan 2017 11:45 PM GMT (Updated: 2017-01-10T01:44:32+05:30)

மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு 21–வது மாநிலமாக நேற்று இணைந்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று டெல்லியில் மத்திய மின்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் தமிழக மின்சாரதுறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. உதய் திட்

புதுடெல்லி

மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு 21–வது மாநிலமாக நேற்று இணைந்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று டெல்லியில் மத்திய மின்துறை மந்திரி பியூஷ் கோயல் மற்றும் தமிழக மின்சாரதுறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

உதய் திட்டம்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் மாநிலங்களின் மின் வினியோக திறனை மேம்படுத்தவும், மின்உற்பத்தி விலையை குறைக்கவும், மின் வினியோக அமைப்புகளின் வட்டிச்சுமையை குறைக்கவும், மின்வினியோக அமைப்புகளில் நிதிஒழுக்கத்தையும் மேலாண்மையையும் நிலை நாட்டவும், ‘‘உதய்’’ (‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்’) என்ற திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘உதய்’ திட்டத்தின்படி, 2015–ம் ஆண்டு செப்டம்பர் வரை, மாநில மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீத அளவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும்; மின் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும்; மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

தமிழகம் இணைந்தது

இந்த திட்டத்தில் இதுவரை இந்தியா முழுவதும் 20 மாநிலங்கள் இணைந்து உள்ளன. 21–வது மாநிலமாக தமிழகம் நேற்று உதய் திட்டத்தில் இணைந்தது.

உதய் திட்டத்தில் உள்ள, 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற அம்சத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, அப்படி மின்சார கட்டணத்தை மாற்றி அமைக்க இயலாது என்று கூறியது. இந்த கோரிக்கையையும், கடனை திருப்பி செலுத்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடன் பத்திரங்கள் வெளியிடுவது தொடர்பான கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இந்த திட்டத்தில் சேர தமிழகம் முடிவு செய்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

‘‘உதய்’’ திட்டத்தில் தமிழகம் சேருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று டெல்லியில் மத்திய எரிசக்தி துறை ராஜாங்க மந்திரி பியூஷ் கோயல் மற்றும் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் எரிசக்தி துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எம்.சாய்குமார், மத்திய எரிசக்தி துறை இணைச் செயலாளர் டாக்டர் ஏ.கே.வர்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசுகையில் கூறியதாவது:–

மின்மிகை மாநிலம்

மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. கடந்த 1984–ம் ஆண்டில் இருந்து தமிழகம் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. அதேபோல கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வீட்டு உபயோகத்துக்காக 100 யூனிட்டுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து, அனைத்து வகையான நுகர்வோருக்கும் நாள் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த 2015–2016–ம் நிதியாண்டில் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த 2014–2015–ம் ஆண்டில் ரூ.12,756 கோடி இழப்பை சந்தித்து உள்ளது. 2015–2016–ல் ரூ.5,786 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்த நிறுவனத்தின் இழப்பு 50 சதவீதத்துக்கும் மேல் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது முந்தைய நிதி ஆண்டை விட இழப்பில் ரூ.6,970 கோடி குறைந்து உள்ளது.

நிதி நிலைமையில் முன்னேற்றம்

அதிகப்படியான மின்சார கட்டணத்தை கட்டுப்படுத்துதல், கட்டணம் குறித்து மின்சாரம் மற்றும் எரிபொருள் வழங்கும் நிறுவனங்களிடம் உரிய பேரம், நவீன மின்சார மீட்டர்கள் பொருத்துதல், நுகர்வோருக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை தளர்த்துதல், சுயமான மின் உற்பத்தி, வெளிப்படையான டெண்டர் மூலம் வெளிச்சந்தையில் சாதாரண கட்டணத்தில் மின்சாரம் பெற்றது உள்ளிட்ட பல திறமையான வழிமுறைகளை மாநில அரசு கையாண்டதால் நிதி நிலைமையில் முன்னேற்றத்தை காண முடிந்தது.

இதனால், தமிழ்நாடு ‘உதய்’ திட்டத்தில் இணையாமலேயே கடந்த 2015–2016–ம் ஆண்டில் மின்கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.66–ல் இருந்து 72 காசாக குறைக்க முடிந்தது. இந்த ஆண்டு நஷ்டம் மேலும் ரூ.2500 கோடி குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் தொகை

கடந்த 2015–ம் ஆண்டு செப்டம்பர் 30–ந் தேதி வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மொத்த கடன் நிலுவை தொகை ரூ.81,312 கோடி ஆகும். பகிர்மானம் தொடர்பான கடன் ரூ.36,833 கோடி. ‘உதய்’ திட்டத்தின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பகிர்மானம் தொடர்பான 75 சதவீத கடனை (2015 செப்டம்பர் 30–ந் தேதி வரை) தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே, உதய் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் கடன் நிலுவைத் தொகை ரூ.30,420 கோடி ஆகும். இந்த ரூ.30,420 கோடியில் 75 சதவீதம் ரூ.22,815 கோடியை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது. மீதி 25 சதவீத தொகையான ரூ.7,605 கோடிக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடன்பத்திரங்களாக வழங்கும்.

நிலக்கரி

தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை வழங்குவதை மத்திய மின்சார துறை ராஜாங்க மந்திரி உறுதி செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிடும் கடன் பத்திரங்களை மத்திய அரசு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்கள் ஏற்கும் வகையில் வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.Next Story