டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி


டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்கள் நியமனம் ரத்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி
x
தினத்தந்தி 9 Jan 2017 11:00 PM GMT (Updated: 9 Jan 2017 8:14 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்களை நியமித்ததை ரத்து செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது. 11 உறுப்பினர்கள் நியமனம் தமிழ்நாடு அரசு பணியாளர

புதுடெல்லி

டி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்களை நியமித்ததை ரத்து செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, தகுதி இல்லாதவர்களை நியமனம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.

11 உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய உறுப்பினர்களாக வக்கீல்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுசாமி, மாடசாமி, முன்னாள் மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி பி.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் முன்னாள் தலைமை என்ஜினீயர் சுப்பிரமணியன், முன்னாள் அரசு அதிகாரி புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரி 31–ந் தேதி, தமிழக அரசு பரிந்துரையின் அடிப்படையில் அப்போதைய கவர்னர் கே.ரோசய்யா, அவர்களை நியமனம் செய்தார். இதை எதிர்த்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் சமூகநீதி பேரவையின் தலைவர் கே.பாலு உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஐகோர்ட்டு ரத்து செய்தது

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை என்றும், எனவே அவர்களது நியமனம் செல்லாது என்றும், அந்த நியமனங்களை ரத்து செய்வதாகவும் கூறி தீர்ப்பு வழங்கியது.

மேலும், 11 உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு மேல்முறையீடு

ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜரானார். அவர் வாதாடும் போது, டி.என்.பி.எஸ்.சி.க்கு முறைப்படி தான் இந்த 11 உறுப்பினர்களின் நியமனங்கள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய கணக்காயர், நீதிபதிகள் நியமனம் போன்று இதில் நியமனம் குறித்த வழிகாட்டும் நெறிமுறைகள் எதுவும் கிடையாது என்றும், ஆனாலும் முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டுத்தான் இவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

ரத்துசெய்ய முடியாது

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘11 பேரை ஒரே நேரத்தில் நியமனம் செய்தது எப்படி?’’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு முகுல் ரோகத்கி பதில் அளிக்கையில், முதல்–அமைச்சர் 11 பேர்களின் பெயர்களையும் பரிந்துரைத்த பிறகு அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டு இருக்கிறார் என்றும், இதில் ஒரு நீதிபதி மற்றும் சில வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்றும், இவர்களில் யாரும் அரசியல்வாதிகள் கிடையாது என்றும் கூறினார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘தன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ஓய்வு பெற்ற, சர்ச்சைக்குரிய நீதிபதியை எப்படி நியமிக்கலாம்? ஐகோர்ட்டு விரிவாக ஆய்வு செய்துதான் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த 11 பேரின் நன்னடத்தை மற்றும் அவர்களுடைய தகுதி குறித்து ஒரே நாளில் எப்படி ஆய்வு செய்ய முடியும்? அப்படி பரிந்துரை அளித்தது அர்த்தமற்றதாக உள்ளது’’ என்று கூறியதோடு, தாங்கள் இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்ப தயார் என்றும், அதே நேரத்தில் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

நீதிபதிகள் கேள்வி

மேலும், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பதவி என்பது கிளாஸ் 1 அதிகாரிக்கு இணையானது என்றும், அந்த இடத்துக்கு இதுபோன்று தகுதியற்ற 11 பேரை அரசு எப்படி நியமித்தது? என்றும் கடுமையான கேள்வியை நீதிபதிகள் முன்வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தனியாக மேல்முறையீடு செய்த 4 பேர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் வாதாடுகையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டாலும் சில சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பதில் மனுதாரர் டி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதாடுகையில், நியமனம் செய்யப்பட்ட 11 பேர்களில் 10–வது வரிசையில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்திக்கு, நீதிபதி பணி நீட்டிப்பு வழங்கப்படாததால் இந்த பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்றும், எனவே இந்த நியமனம் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஏற்க மறுப்பு

இதைத்தொடர்ந்து அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், புதிய நியமனங்கள் நடைபெறும் வரை இந்த 11 பேரும் 3 மாதங்களுக்கு பணியில் நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். அது இல்லாதவர்களை நியமிக்கக் கூடாது. தகுதிகள் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாமா? நேர்முகத் தேர்வு நடத்தி அரசுப்பணியாளர்களை நியமனம் செய்யும் இடத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச தகுதியாவது வேண்டாமா?’’ என்ற கேள்விகளை எழுப்பினர்.

அனுமதி

பின்னர் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முறையாக, பரிசீலனை நடத்தி டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு அனுமதி அளித்தனர். ஆனால் தமிழக அரசின் பட்டியலில் 11 பேர்களில் 10–வதாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தியின் நியமனம் செல்லாது என்று கூறிய நீதிபதிகள், புதிதாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் பட்டியலில் மீதமுள்ள 10 பேர்களின் பெயர்களை மற்ற புதிய பெயர்களுடன் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்து உத்தரவிட்டனர்.

அத்துடன் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோரி, பதில்மனு தாரர்களான டி.கே.எஸ்.இளங்கோவன், சமூகநீதி பேரவையின் தலைவர் கே.பாலு ஆகியோருக்கு, நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story