பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியடைந்து விட்டார் - எல்லைப் பாதுகாப்பு படை விளக்கம்


பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியடைந்து விட்டார் - எல்லைப் பாதுகாப்பு படை விளக்கம்
x
தினத்தந்தி 10 Jan 2017 7:30 AM GMT (Updated: 10 Jan 2017 7:30 AM GMT)

“இது எங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும், முழு விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடைபெறும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எல்லைப் பாதுகாப்பு படை ஐஜி டிகே உபாத்யாய்.


புதுடெல்லி, 

எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தரமான, போதுமான உணவு வழங்கப்படவில்லை என வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் யாதவ், பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியடைந்துவிட்டார் என்று எல்லைப் பாதுகாப்பு படை கூறிஉள்ளது.

எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு தரமான மற்றும் போதிய உணவு வழங்கப்படவில்லை என்று 
எல்லை பாதுகாப்புப் படையின் 29-வது பிரிவை சேர்ந்த வீரர் டி.பி.யாதவ் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக விசாரணைக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு உள்ளார். எல்லைப் பாதுகாப்பு படையும் விசாரிப்பதாக கூறியது. இந்நிலையில் ராணுவ வீரர்களுக்கு தரமான, போதுமான உணவு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றம் சாட்டிய ராணுவ வீரர் அதிகம் மது அருந்துபவர் என்று எல்லைப் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
எல்லைப் பாதுகாப்பு படை டிஐஜி எம்டிஎஸ் மான் பேசுகையில், வீடியோவில் ராணுவ வீரர் யாதவ் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். அவருடைய 20 ஆண்டுகால சேவையில் 4 முறை மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார். எனவே அவருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை, அதனால் அவர் விரக்தியடைந்து விட்டார். அவருடைய குற்றச்சாட்டில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிஉள்ளார். 

இதனைத் தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படை ஐஜி டிகே உபாத்யாய் பேசுகையில், “இது எங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும், முழு விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடைபெறும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் சுவையானது மிகவும் நன்றாக இருக்காது என்பதை நான் ஒத்துக்கொள்கின்றேன், ஆனால் நாங்கள் இவ்விவகாரம் தொடர்பாக ராணுவ வீரர்களிடம் இருந்து இதுவரையில் எந்தஒரு புகாரும் பெற்றது கிடையாது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் அது தொடர்பாக எதையும் கூற விரும்பவில்லை. இவ்விவகாரத்தில் எந்தஒரு முறைகேடும் நடந்து இருந்தால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

ராணுவ நீதிமன்றத்திற்கு சென்றவர், ஒழுங்கு நடவடிக்கைகளை சந்தித்தவர்; அவருடைய குடும்பத்தை கருத்தில் கொண்டே அவரை பணியில் இருந்து நீக்கம் செய்யவில்லை. ராணுவ உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட முகாம்களுக்கு சென்று உள்ளனர், வீடியோவில் சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தஒரு புகாரும் தெரிவிக்கப்படவில்லை. ராணுவ வீரர் வேறுஒரு பிரிவுக்கு மாற்றப்படுவார், அப்படியென்றால்தான் அவருக்கு யாருடைய அழுத்தமும் இருக்காது மற்றும் சுதந்திரமான விசாரணை நடைபெறும். டிஐஜி சம்பந்தப்பட்ட முகாமிற்கு சென்று உள்ளார், அங்கு யாதவ் உள்பட எந்தஒரு ராணுவ வீரரும் புகார் தெரிவிக்கவில்லை. இதில் நோக்கமானது வேறுவிதமானதாக இருந்து இருக்கலாம். 

பணியின் போது அவர் செல்போனை கொண்டு சென்றது ஏன்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவும் ஒழுங்கு விதிமுறைகளுக்கு எதிரானது,” என்று கூறிஉள்ளார்.

Next Story