சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே ஜல்லிக்கட்டு குறித்து முடிவு எடுக்கப்படும் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பேட்டி


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகே ஜல்லிக்கட்டு குறித்து முடிவு எடுக்கப்படும் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2017 10:45 PM GMT (Updated: 10 Jan 2017 9:38 PM GMT)

ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில்மாதவ் தவே கூறினார். ஜல்லிக்கட்டு நடக்குமா? தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில் மத்திய அரசு

புதுடெல்லி,

ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில்மாதவ் தவே கூறினார்.

ஜல்லிக்கட்டு நடக்குமா?

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசு உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. பொங்கல் திருநாள் நெருங்கிவரும் நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி அனில்மாதவ் தவேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:–

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த அனைத்து பிரச்சினைகளும் 2011 ஜூலை 11–ந் தேதியன்று தொடங்கியது. அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்ததில் இருந்து இந்த பிரச்சினை தொடங்கியது. அதற்கு முன்பு ஜல்லிக்கட்டு நடத்துவதில் எந்த பிரச்சினையும் கிடையாது.

மத்திய அரசு 2016–ம் ஆண்டில் இந்த பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்தது. கலாசாரம் மற்றும் பாரம்பரியம் முக்கியத்துவம் பெறும் நம் நாட்டில் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

ஜல்லிக்கட்டு நம்முடைய பாரம்பரியத்தின் ஒரு முக்கியமான பகுதி. எனவே தான், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிப்பதை ஆதரித்து பதில் மனு தாக்கல் செய்தது. காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க தயாராக இருப்பதாகவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

தீர்ப்புக்கு பிறகே முடிவு

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டை அனுமதிப்பதற்கு சாதகமாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நேரத்தில் அதற்காக காத்திருப்பது தான் மத்திய அரசு முன்பு உள்ள ஒரே வழி.

தீர்ப்புக்கு முன்பு இதுகுறித்து எதையும் கூறுவது சரியானதாக இருக்காது. அது மிகவும் கடினமானதும் கூட. தீர்ப்பு நாளையோ, நாளை மறுநாளோ அல்லது எப்போது வந்தாலும், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மக்களின் உணர்வுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு மதிப்பு அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். இது நம்முடைய பாரம்பரியம், இதனை கோர்ட்டு கருத்தில் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

கமல்ஹாசனுக்கு ஆதரவு

ஜல்லிக்கட்டில் பிரியாணி செய்வதில்லை. காளைகளுடன் மக்கள் விளையாடுகின்றனர். காளைகள் அன்புடன் நடத்தப்படுகின்றன. இதற்கு தடைகோருவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று தமிழக நடிகர் (கமல்ஹாசன்) கூறிய கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். ஜல்லிக்கட்டில் வன்முறை ஏதும் இல்லை.

மத்திய அரசின் கைகள் தற்போது கட்டப்பட்டுள்ளன. கோர்ட்டின் தீர்ப்பு வந்த பிறகே இதுகுறித்து முடிவெடுக்கப்படும். ஒரு நல்ல தீர்வு, சுமுகமான முடிவே இதற்கு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story