ஆண்டு இறுதி நிதிநிலை அறிக்கை வெளியிடாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஆண்டு இறுதி நிதிநிலை அறிக்கை வெளியிடாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Jan 2017 10:45 PM GMT (Updated: 2017-01-11T03:19:43+05:30)

ஆண்டு இறுதி நிதிநிலை அறிக்கையை வெளியிடாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிற நிதிகளையும், அவற்றை அவை ப

புதுடெல்லி,

ஆண்டு இறுதி நிதிநிலை அறிக்கையை வெளியிடாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிற நிதிகளையும், அவற்றை அவை பயன்படுத்துகிற விதத்தையும் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் எம்.எல்.சர்மா ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. ஒரு பதில் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ‘‘நாட்டில் 29 லட்சத்து 99 ஆயிரத்து 623 அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், 2 லட்சத்து 90 ஆயிரத்து 787 தொண்டு நிறுவனங்கள்தான் தங்கள் ஆண்டு இறுதி நிதிநிலை அறிக்கையை (இருப்புச்சீட்டு) வெளியிடுகின்றன. இது ஆவணங்கள் காட்டுகிற புள்ளி விவரம்’’ என கூறப்பட்டுள்ளது.

விசாரணை

இந்த நிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குதாரர் எம்.எல்.சர்மா வாதிட்டபோது, ‘‘நாட்டில் தோராயமாக 32 லட்சம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில், 3 லட்சம் தொண்டு நிறுவனங்கள் மட்டும்தான் தங்கள் இருப்புச்சீட்டை (நிதி அறிக்கை) வெளியிடுகின்றன’’ என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார்.

உத்தரவு

அதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘தங்களது இருப்புச்சீட்டுகளை வெளியிடாத அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பொது நிதியை தவறாக பயன்படுத்திய தொண்டு நிறுவனங்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் இதில் அடங்கும்’ என தெளிவுபடுத்தியது.

இந்த வி‌ஷயத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மத்திய அரசுக்கு கண்டனம்

விசாரணையின்போது, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிற நிதியை கண்காணிப்பதற்கு சரியான வழிமுறை ஏற்படுத்தாததற்கு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, ஏப்ரல் 5–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story