அகிலேஷ்தான் முதல்-மந்திரி வேட்பாளர்; ராம் கோபால்தான் புதிய கட்சியை உருவாக்க விரும்புகிறார் - முலாயம் சிங்


அகிலேஷ்தான் முதல்-மந்திரி வேட்பாளர்; ராம் கோபால்தான் புதிய கட்சியை உருவாக்க விரும்புகிறார் - முலாயம் சிங்
x
தினத்தந்தி 11 Jan 2017 9:50 AM GMT (Updated: 2017-01-11T15:20:07+05:30)

சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் சைக்கிள் சின்னம் யாருக்கு? என தேர்தல் கமி‌ஷன் 13–ந் தேதி இரு தரப்பினரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

லக்னோ, 

 உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி வேட்பாளர் அகிலேஷ் யாதவ்தான், பின்னர் ஒரு புதிய கட்சிக்கு அவசியம் என்ன? என்று முலாயம் சிங் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் தேசிய தலைவர் முலாயம் சிங்குக்கும், அவருடைய மகனான முதல்–மந்திரி அகிலேஷ் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அடுத்த மாதம் அங்கு சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற இருப்பதால் சைக்கிள் சின்னத்திற்கு இருதரப்பும் உரிமை கோருகிறது. யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் இருவரிடமும் விளக்கம் கேட்டது. 

சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் சைக்கிள் சின்னம் யாருக்கு? என தேர்தல் கமி‌ஷன் 13–ந் தேதி இரு தரப்பினரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தினால் மோதலை தொடர்வதற்கு முலாயம் சிங் யாதவ் விரும்பவில்லை என தெரிகிறது. இப்போது அவர் தன்னுடைய மகன் அகிலேஷ் யாதவுடன் எந்தஒரு விரோதமும் கிடையாது என விளக்கம் அளித்து வருகிறார். அதேவேளை இப்பிரச்சனைகளுக்கு எல்லாம் கட்சியில் இருந்து 6 வருடங்களுக்கு நீக்கப்பட்ட ராம்கோபால் யாதவே காரணம் என குற்றம் சாட்டிஉள்ளார். இப்போது புதிய குற்றச்சாட்டை முன்வைத்து உள்ள முலாயம் சிங் யாதவ், ராம் கோபால் யாதவ் மோட்டார் சைக்கிள் சின்னத்துடன் புதிய கட்சியை உருவாக்க துடிக்கிறார் என்று கூறிஉள்ளார். 

லக்னோவில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் பிளவு என்பதை அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிவிட்டார். தொண்டர்களிடம் கட்சியின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த முலாயம் சிங் யாதவ், ராம் கோபால் யாதவே தற்போதைய  பிரச்சனைக்கு காரணம் என குற்றம் சாட்டிஉள்ளார். முலாயம் சிங் யாதவ் பேசுகையில், “கட்சியில் பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை, கட்சி தொடர்ந்து ஒன்றாகவே இருக்க வேண்டும். ராம்கோபால் யாதவ் புதிய கட்சியை உருவாக்க விரும்புகிறார். அகில பாரதீய சமாஜ்வாடி கட்சியை மோட்டார் சைக்கிள் சின்னத்துடன் தொடங்க விரும்புகிறார்,” என்றார். 

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி வேட்பாளராக அகிலேஷ் யாதவ் அறிவிக்கப்பட்டு உள்ளார். “பின்னர் புதிய கட்சிக்கான அவசியம் என்ன?” என்றும் கேள்வி எழுப்பிஉள்ளார். 

நாம் கட்சியை பாதுகாப்போம், நான் கட்சியை பாதுகாக்க வேண்டியது உள்ளது. நம்முடைய சைக்கிள் சின்னத்தையும் நான் பாதுகாக்க வேண்டியது உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசிஉள்ளார். 

செவ்வாய் கிழமை முலாயம் சிங் யாதவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து இறங்கமாட்டேன் என அகிலேஷ் யாதவ் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

Next Story