அரசியல் கட்சிகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி


அரசியல் கட்சிகளுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்படுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 11 Jan 2017 4:14 PM GMT (Updated: 2017-01-11T21:44:23+05:30)

அரசியல் கட்சிகளின் நன்கொடைக்கு வருமான வரிவிலக்கு அளிப்பதற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.


புதுடெல்லி, 
 
நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை தடை செய்த பிரதமர் மோடி, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், மாற்றிக்கொள்ளவும் வழிமுறைகளை அறிவித்தார். 

எனினும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளை (பழைய நோட்டுகள் உள்பட) வங்கிகளில் செலுத்த எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாததுடன், அவற்றுக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டது. இதனால் அரசியல் கட்சிகள் மூலம் ஏராளமான கருப்பு பணம் மாற்றக்கூடும் என புகார் எழுந்தது.

இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வருமான வரிவிலக்கு அளிப்பதை எதிர்த்தும், இதற்கு வழிசெய்யும் வருமான வரிச்சட்டம் 13 ஏ பிரிவை ரத்து செய்யக்கோரியும் எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  

மேலும் அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் அவை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளில் டெபாசிட் செய்துள்ள தொகை போன்றவை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள ‘சில தேர்தல்களுக்கான சிறப்பு வழிமுறைகளை’ நீக்கக்கேட்டும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இம்மனு மீது டிசம்பர் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது உடனடியாக விசாரிக்க  மறுத்த நீதிபதிகள், ‘நீங்கள் கூறும் வருமான வரிச்சட்டம் 13 ஏ பிரிவு கடந்த 50 ஆண்டுகளாக அமலில் இருக்கிறது. அப்படியிருக்க இதில் எதற்கு அவசரம் காட்ட வேண்டும்? கோர்ட்டு விடுமுறை காலம் முடிந்தபின் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந்தேதி இந்த மனுவை விசாரிக்கலாம்’ என்று கூறினர்.

சர்மா அரசியல் சாசன விதிமுறைகளை மீறி இந்த வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்த அவர், சாதாரண மனிதர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படவில்லை என கூறியிருந்தார்.

வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் கட்சிகளின் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளிப்பது என்பது நிர்வாக நடவடிக்கை என்றும், இது அரசியல் சாசன வழிமுறைகளை மீறும் செயல் ஆகாது என்றும் நீதிபதிகள் கூறினர். மேலும் இந்த நடவடிக்கை வருமான வரிச்சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் ஆகாது என்பதால் இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.


Next Story