ஒரு பாகிஸ்தானியர் உள்பட காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஒரு பாகிஸ்தானியர் உள்பட காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2017 10:08 PM GMT (Updated: 2017-02-05T03:38:21+05:30)

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட சோபூரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்துக்கு உட்பட்ட சோபூரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அங்குள்ள சீரு பகுதியில் சோதனைச்சாவடி ஒன்றை நிறுவிய பாதுகாப்பு படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனம் அந்த வழியாக வந்தது.

அதை நிறுத்தி சோதனையிட்ட பாதுகாப்பு படையினர், அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் பயங்கரவாதிகள் என்பதும், அதில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் சரணடையுமாறு பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள், தாங்கள் வைத்திருந்த தானியங்கி ஆயுதங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். எனவே பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர்.

இரு பிரிவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் கொண்டு வந்த சில ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story