இந்தியாவுடன் இணைவது குறித்து பாகிஸ்தானில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்


இந்தியாவுடன் இணைவது குறித்து பாகிஸ்தானில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 6 Feb 2017 4:33 AM GMT (Updated: 6 Feb 2017 4:33 AM GMT)

இந்தியாவுடன் மீண்டும் இணைவது குறித்து பாகிஸ்தானில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராஜ்நாத் சிங் பேசிஉள்ளார்.

புதுடெல்லி,

ஹரிதுவாரில் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “பாகிஸ்தான் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புகிறது, காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும், இதனை எந்தஒரு சக்தியாலும் மாற்ற முடியாது. பாகிஸ்தான் விரும்பினால் அந்நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடத்திக் கொள்ளலாம், பாகிஸ்தானாக தொடர வேண்டுமா அல்லது இந்தியாவுடன் மீண்டும் இணைய வேண்டுமா என்று.” என்றார். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நட்புறவானது மோசமான நிலையை அடைந்து உள்ளதற்கு பாகிஸ்தானே காரணம் என சாடிய ராஜ்நாத் சிங், “இந்தியா எப்போதும் அமைதியான நட்புறவை தொடங்கவே விரும்புகிறது, ஆனால் பாகிஸ்தான் மட்டுமே நட்புறவை சீர்குலைக்க முயற்சிக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடை செய்ய வேண்டும், காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று செயல்படுபவர்களையும் தடை செய்யவேண்டும்,” என்று கூறிஉள்ளார். 

“ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தி, இந்தியாவாலும் வலுவான நடவடிக்கையை எடுக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டிஉள்ளோம். இந்தியா அமைதியை விரும்பும் நாடு, இருப்பினும் மென்மையான தேசமாக இருக்காது,” என்று பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக பேசினார் ராஜ்நாத் சிங். 

இந்தியாவிற்கு எதிராக சதிதிட்டம் தீட்டும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங், “யாராவது எங்களை தொட்டால் விடமாட்டோம்,” என்றார். 

Next Story