சமாஜ்வாடி–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் முலாயம் சிங் யாதவ் திடீர் ‘பல்டி’


சமாஜ்வாடி–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் முலாயம் சிங் யாதவ் திடீர் ‘பல்டி’
x
தினத்தந்தி 6 Feb 2017 10:15 PM GMT (Updated: 6 Feb 2017 9:58 PM GMT)

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவுக்கும், அவருடைய மகனும் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் பதவியை அகிலேஷ் யாதவ் கைப்பற்றினார். மேலும் முலாயம் சிங்கின் தம்பி சிவபால் யாதவை ஓரங்கட்டினார்.

அடுத்த அதிரடியாக காங்கிரசுடன், அகிலேஷ் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணிக்கு முலாயம் சிங் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில் திடீரென அவர் தன்னுடைய நிலையில் இருந்து ‘பல்டி’ அடித்தார்.

எம்.பி.யாக இருக்கும் முலாயம் சிங் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

உத்தரபிரதேச முதல்–மந்திரியாக அகிலேஷ் மீண்டும் பதவி ஏற்பார். எனவே சமாஜ்வாடி–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பிரசாரம் செய்ய உள்ளேன்.

கட்சியில் இப்போது யாரும் மகிழ்ச்சியான சூழ்நிலையில் இல்லை. தனிக்கட்சி தொடங்க போவதாக சிவபால் யாதவ் என்னிடம் இதுவரை கூறவில்லை. அகிலேஷ் மீதான கோபம் காரணமாக அவர் அவ்வாறு பேசி இருக்கலாம். தனிக்கட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story