பண மதிப்பை நீக்கியது நேர்மையானவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை பிரதமர் மோடி பேச்சு


பண மதிப்பை நீக்கியது நேர்மையானவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை  பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 9 Feb 2017 12:00 AM GMT (Updated: 8 Feb 2017 8:30 PM GMT)

பண மதிப்பை நீக்கியது நேர்மையானவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

பண மதிப்பை நீக்கியது நேர்மையானவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது டெல்லி மேல்–சபையில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:–

மிகப்பெரிய நடவடிக்கை

பண மதிப்பை நீக்கியது உலக அளவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்று. ஊழலால் நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால்தான் கருப்பு பணத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பெரும்பான்மை ஆதரவுடன் ஏழை, நடுத்தர மக்கள் ஒரு பக்கமும், அதை எதிர்ப்பவர்கள் இன்னொரு பக்கமும் நின்றனர்.

நேர்மையானவர்களை வலிமைப்படுத்த நேர்மையற்றவர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வி‌ஷயத்தில்தான் முதல் முறையாக அரசும், மக்களும் ஒரே மனோ நிலையில் இருந்தனர்.

ஏறக்குறைய 35 ஆண்டுகள் மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதார கொள்கைகளில் ஆதிக்கம் செலுத்தினார். பல்வேறு ஊழல்களுக்கு இடையே அவர் மட்டும் மெல்லிய அளவில் நேர்மையானவராக இருந்தார். தன்னை காத்துக்கொள்ளும் கலையில் அவர் கைதேர்ந்தவராகவும் திகழ்ந்தார்.

நேர்மையானவர்களுக்கு பலன்

பண மதிப்பை நீக்கியது கருப்பு பணத்துக்கு எதிரான போராட்டம்தான். அரசியல் கட்சிகளுக்கு எதிரானது அல்ல. எந்தவொரு கட்சியையும் ஒழிப்பதற்காகவும் எடுக்கப்படவில்லை. எனவே இதில் இறுதியான பலனை நேர்மையானவர்கள் பெறுவார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

கருப்பு பணம், பயங்கரவாதம், கள்ளநோட்டு ஆகியவை நமது அன்றாட வாழ்வில் ஊடுருவியது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சமூகத்தில் நுழைந்த இந்த தவறுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு இருக்கிறது.

பண மதிப்பு நீக்கப்பட்டபோது முதலில் 700 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்தனர். அதன் பிறகு நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்தது. இது நமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லையா?

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் வெளிநடப்பு

மோடி தனது பேச்சின்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கேலி செய்தபோது மன்மோகன் சிங்கும் அவையில் இருந்தார்.

அவரை கிண்டல் செய்ததும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மோடியை கண்டித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


Next Story