மன்மோகன் சிங் குறித்து சர்ச்சை கருத்து: பிரதமர் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்


மன்மோகன் சிங் குறித்து சர்ச்சை கருத்து: பிரதமர் மன்னிப்பு கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Feb 2017 11:30 PM GMT (Updated: 9 Feb 2017 8:07 PM GMT)

மன்மோகன் சிங் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தல்.

புதுடெல்லி

மன்மோகன் சிங் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் உறுப்பினர்கள், பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பிரதமர் மோடி பேச்சு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி மேல்–சபையில் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை அவர் விமர்சித்தார்.

அதன்படி, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நிகழ்ந்த பிறகும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாததை சுட்டிக்காட்டிய அவர், ‘ரெயின்கோட் அணிந்து குளிக்கும் கலை மன்மோகனுக்கு தெரிந்துள்ளது’ என்று கூறினார்.

இதைப்போல முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தும், அதை அவர் நடைமுறைப்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

நல்லது அல்ல

பிரதமர் மோடியின் இந்த கருத்துகள் காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த விவகாரத்தை நேற்று பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள், இது தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற பூஜ்ஜிய நேரத்தின் போது இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துகள் அனைத்தும் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல என்று கூறினார்.

உடனே குறுக்கிட்ட பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த குமார், மற்றொரு சபை விவகாரத்தை இங்கு எழுப்ப முடியாது என்று கூறினார். சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் இந்த கருத்தை வலியுறுத்தினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவையில் இருந்தார்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளியால் கோபமடைந்த சபாநாயகர், மற்ற உறுப்பினர்கள் சபையில் பேசும் உரிமையை காங்கிரசார் பறிப்பதாக குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து சோனியா காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சீதாராம் யெச்சூரி

இதைப்போல மேல்–சபை காலையில் கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, உயிர்த்தியாகம் செய்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருப்பதன் மூலம் பிரதமர் நாட்டை இழிவுபடுத்தி உள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் குறித்து சில தவறான கருத்துகளை வெளியிட்டதாகவும், தற்போது உயிருடன் இல்லாதவர் குறித்து பேசுவது தவறானது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

இதற்கு பதிலளித்த சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன், பிரதமரின் கருத்து மீது ஏதாவது அதிருப்தி இருந்தால் நேற்றே (நேற்று முன்தினம்) தெரிவித்து இருக்க வேண்டும் என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு தவறான மற்றும் இழிவுபடுத்தக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்தியதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் ஐக்கிய ஜனதாதள உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு

பின்னர் மீண்டும் சபை கூடிய போது கேள்வி நேரத்தை தொடங்க அவைத்தலைவர் ஹமீது அன்சாரி முயன்றார். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளி மீண்டும் தொடர்ந்தது. குறிப்பாக மன்மோகன் சிங் தொடர்பாக பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தவாறே இருந்தனர்.

முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் தொடர்பாக பிரதமர் மோடி கூறிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய் சிங் கேட்டுக்கொண்டார். இதற்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘அவமானம், அவமானம்’ என்று கோ‌ஷமிட்டவாறே இருந்தனர். இவ்வாறு எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் சபை மீண்டும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story