அணு ஆயுத நகரத்தை இந்தியா ரகசியமாக உருவாக்குகிறது: குற்றம் சாட்டும் பாகிஸ்தான்


அணு ஆயுத நகரத்தை இந்தியா ரகசியமாக உருவாக்குகிறது: குற்றம் சாட்டும் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 10 Feb 2017 4:42 AM GMT (Updated: 2017-02-10T10:12:33+05:30)

அணு ஆயுத நகரத்தை இந்தியா ரகசியமாக உருவாக்குகிறது என்று பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.

இஸ்லமபாத்,

இந்தியா இரகசியமாக ஏராளமான அணு ஆயுதங்கள் நிறைந்த நகரம் ஒன்றை ரகசியமான முறையில் கட்டமைத்து வருவதாக, பாகிஸ்தான் பரபரப்புக் குற்றச்சாட்டு கூறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா இது குறித்து கூறும் போது,பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகிறது. ஆனால்,இந்தியா அதனை தொடர்ந்து, முறியடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும், இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறுகிறது. அதற்குப் பாகிஸ்தான் பதிலடி கொடுக்க நேரிடுகிறது.

தற்போது அணுசக்தியை அதிகரிக்கத் தொடங்கியுள்ள இந்தியா, ஏராளமான ஆயுதங்களை அதன் அடிப்படையில் உற்பத்தி செய்துவருகிறது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் வகையில், அணு ஆயுதங்களை சேமித்து வைப்பதற்காகவே, பிரத்யேகமாக ஒரு நகரினை இந்திய பாதுகாப்புத் துறை கட்டமைத்து வருகிறது. இதுபற்றி நாங்கள் ஏற்கனவே புகார் கூறியுள்ளோம். ஆனால், உலக வல்லரசு நாடுகள் யாரும் இந்தியாவை கண்டுகொள்வதில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஆனால், பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்திய திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- “ பாகிஸ்தான் கூறும் ரகசிய நகரம் என்பது பாகிஸ்தானின் மித மிஞ்சிய கற்பனை. இந்தியா எப்போதுமே தனது சர்வதேச கடைமைகளை முறையாகச்செய்து வருகிறது. சர்வதேச அணுசக்தி கொள்கைகளை இந்தியா உறுதியாக கடைபிடித்து விடுகிறது” என்று தெரிவித்தார்.

Next Story