ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்


ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 7 March 2017 5:37 AM GMT (Updated: 7 March 2017 5:36 AM GMT)

கேரளாவில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.


கால்பேட்டா,

பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்தஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கிஉள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story