ஒரு மாதத்துக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது


ஒரு மாதத்துக்கு பிறகு பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 9 March 2017 12:00 AM GMT (Updated: 2017-03-09T01:17:28+05:30)

ஒரு மாதத்துக்கு பிறகு, பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

புதுடெல்லி,

ஒரு மாதத்துக்கு பிறகு, பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுவதால் இந்த தொடரிலும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2–ம் கட்ட தொடர்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டம் கடந்த மாதம் 9–ந் தேதி முடிவடைந்தது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்ததால் அதற்கேற்ப கூட்டத் தொடருக்கு ஒரு மாத இடைவெளி விடப்பட்டது.

தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பாராளுமன்றத்தின் 2–ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம்(ஏப்ரல்) 13–ந் தேதி வரை நடக்கிறது.

பணமதிப்பு நீக்கம்

இந்த தொடரில் பாராளுமன்ற அவை மற்றும் டெல்லி மேல்–சபையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதற்கு வரிந்து கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பணத்தை ஒழிக்க முடிந்ததா? என்று 2 அவைகளிலும் விரிவான விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கிறது. இதற்கு இடதுசாரி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. எனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை பாராளுமன்றத்தில் மீண்டும் விசுவரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களை காங்கிரஸ் ஏற்க மறுத்து வருவதால் இப்பிரச்சினையும் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தல், தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டது ஆகிய பிரச்சினைகளை அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் இரு அவைகளிலும் பலமாக எழுப்ப திட்டமிட்டு உள்ளனர்.

கனிமொழி வலியுறுத்தல்

தமிழக மீனவர் படுகொலை தொடர்பாக டெல்லி மேல்–சபையில் சிறப்பு விவாதம் நடத்தவும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து டெல்லி மேல்–சபை தலைவருக்கு அவர் கடிதம் எழுதி இருப்பதாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

சரக்கு சேவை வரி

மத்திய அரசை பொறுத்தவரை திட்டமிட்டபடி நாடு முழுவதும் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை ஜூலை 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறது.

எனவே, இது தொடர்பான வரைவு மத்திய சரக்கு சேவை வரி மசோதா மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி மசோதா ஆகிய இரண்டையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைப்பு காட்டும். இந்த 2 மசோதாக்களும் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2–வது பகுதியில் நிறைவேற்றப்படும் என்று ஏற்கனவே நிதி அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) 5 மாநிலங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதால் இந்த தேர்தலின் முடிவுகளும் பாராளுமன்றத்தில் பலமாக எதிரொலிக்கும்.

எனவே இந்த கூட்டத் தொடரிலும் பாராளுமன்ற 2 அவைகளிலும் கூச்சல் குழப்பம், அமளிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கலாம்.


Next Story