அபராதம் விதிக்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய எஸ்.பி.ஐ வங்கி முடிவு?


அபராதம் விதிக்கும் திட்டத்தை  மறு பரிசீலனை செய்ய எஸ்.பி.ஐ வங்கி முடிவு?
x
தினத்தந்தி 10 March 2017 2:52 AM GMT (Updated: 2017-03-10T08:22:37+05:30)

குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய எஸ்.பி.ஐ வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மும்பை,


 வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்ற நடைமுறையை, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. பெருநகரங்களில் சேமிப்புக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய், நகர்ப்புறங்களில் 3 ஆயிரம் ரூபாய், புறநகரப் பகுதிகளில் 2 ஆயிரம் ரூபாய், கிராமப் புறங்களில் 1000 ரூபாய் என குறைந்தபட்சமாக இருப்புத் தொகைக்கு வரம்பு நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்புத் தொகை குறைவாக இருப்பதற்கேற்றவாறு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அபராதம் பிடித்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதையடுத்து, இத்திட்டத்தை திரும்பப் பெறுமாறு, எஸ்.பி.ஐ.,க்கு, மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. 

ஆனால் இதை மறுத்துள்ள, எஸ்.பி.ஐ., தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, 'மத்திய அரசிடம் இருந்து, இதுவரை அதிகார பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை; ஒருவேளை வந்தால், வங்கி பரிசீலிக்கும்' என, தெரிவித்துள்ளார். இதையடுத்து அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story