கருத்துக்கணிப்புகள் தவறு, உத்தர பிரதேசத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்: ராகுல் காந்தி


கருத்துக்கணிப்புகள் தவறு, உத்தர பிரதேசத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 10 March 2017 7:42 AM GMT (Updated: 10 March 2017 7:41 AM GMT)

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறு எனவும் உத்தர பிரதேசத்தில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த தேர்தல்களில் பதிவான ஓட்டுகள் நாளை (சனிக்கிழமை) எண்ணப்படுகின்றன. இந்த மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது நாளை மதியம் தெரிய வந்துவிடும்.

இந்த நிலையில் 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் வெளியாகி உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பலான கருத்துக்கணிப்புகள் முடிவுகள் வெளியாகின.  
 
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இவை அனைத்தும் தவறானது என்று தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறும் போது, “கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறானவை. பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பு தவறாக இருந்தது. உத்தர பிரதேசத்தில்  நாங்கள் தான் வெற்றி பெறுவோம். கருத்துக்கணிப்புகள் பற்றி நான் எந்த கருத்தையும் கூறப்போவது இல்லை. தேர்தல் முடிவு பற்றி நாங்கள் நாளை பேசுவோம்”  இவ்வாறு அவர் கூறினார்.

உத்தர பிரதேசத்தில் தொங்கு சட்டசபை என்ற நிலை வந்தால் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ்வாடி கட்சியிடம் இருந்தும் ஆதரவு கோர தயங்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி நேற்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. 

Next Story