மின்னணு எந்திரங்களில் மோசடி நடந்துள்ளது: மாயாவதி பரபரப்பு பேட்டி


மின்னணு எந்திரங்களில் மோசடி நடந்துள்ளது: மாயாவதி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 11 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-12T02:38:09+05:30)

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மின்னணு எந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளது. தேர்தல் கமி‌ஷன் மறுதேர்தல் நடத்த வேண்டும்’’ என்று மாயாவதி வலியுறுத்தினார்.

லக்னோ,

‘‘உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மின்னணு எந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளது. தேர்தல் கமி‌ஷன் மறுதேர்தல் நடத்த வேண்டும்’’ என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தினார்.

யாருக்கு ஓட்டு போட்டாலும் பா.ஜ.வுக்கு பதிவு

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி, அந்த கட்சி மாநிலம் முழுவதும் முன்னிலை பெறத்தொடங்கிய நிலையில், லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அவசரமாக நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் யாருக்கும் ஏற்புடையதாக இல்லை. மின்னணு ஓட்டு எந்திரங்களில் பாரதீய ஜனதாவை தவிர வேறு யாருக்கு ஓட்டுப்பதிவு செய்தாலும், அவை பதிவானதாக தெரியவில்லை. எந்த ஒரு கட்சிக்கு ஓட்டுப்பதிவு செய்தாலும், அது பாரதீய ஜனதாவுக்கு போய்ச்சேருகிற விதத்தில் அமைந்திருப்பதாக தெரிகிறது. இது இப்போது பொதுவான விவாதப்பொருளாகி இருக்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

சவால்

‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷாவுக்கும் கொஞ்சமாவது அறநெறியும், நேர்மையும் இருந்தால், உத்தரபிரதேசத்தில் புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் கமி‌ஷனை கோரும் துணிச்சல் இருக்கிறதா?’’ என மாயாவதி சவால் விடுத்தார்.

‘‘முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள பகுதிகளிலும் கூட பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்பதை ஏற்க முடியாது’’ என அவர் குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘‘மாநிலத்தில் 20 சதவீத வாக்காளர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் ஒருவருக்கு கூட தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதா வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில்கூட பாரதீய ஜனதா வெற்றி பெற்றிருக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை’’ என்றார்.

தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம்

மேலும், ‘‘இதுபற்றி தேர்தல் கமி‌ஷனுக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன். ஓட்டு எண்ணிக்கையை தேர்தல் கமி‌ஷன் நிறுத்த வேண்டும். தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும். மின்னணு ஓட்டு எந்திரங்கள் பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். அதைத் தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி ஓட்டுச்சீட்டு கொண்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளேன்’’ என மாயாவதி கூறினார்.

இறுதியில் பாரதீய ஜனதா கட்சிக்கு மாயாவதி எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது அவர், ‘‘ஜனநாயகத்தை கொன்று விட்டு, ஜனநாயகத்துக்கு துரோகம் செய்துவிட்டு, தேர்தலில் பெரும்பான்மை பெற்று விட்டோம் என்று அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம்’’ என்று கூறினார்.


Next Story