தேர்தல் வெற்றியால் பிரதமர் மோடி நெகிழ்ச்சி ‘இந்த வெற்றி அபாரமானது, மெத்த பணிவுடன் ஏற்கிறேன்’’


தேர்தல் வெற்றியால் பிரதமர் மோடி நெகிழ்ச்சி ‘இந்த வெற்றி அபாரமானது, மெத்த பணிவுடன் ஏற்கிறேன்’’
x
தினத்தந்தி 12 March 2017 12:00 AM GMT (Updated: 11 March 2017 9:20 PM GMT)

தேர்தல் வெற்றியால் பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். ‘இந்த வெற்றி அபாரமானது. மெத்த பணிவுடன் ஏற்கிறேன்’’ என கூறினார்.

புதுடெல்லி,

தேர்தல் வெற்றியால் பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த அவர், ‘‘இந்த வெற்றி அபாரமானது. மெத்த பணிவுடன் ஏற்கிறேன்’’ என கூறினார்.

தேர்தல் வெற்றி

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அந்த கட்சி மூன்றில் இரு பங்கு இடங்களில் வென்று, ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை அந்த கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டுவிட்டரில் தொடர்ந்து செய்திகள் வெளியிட்ட வண்ணமாக இருந்தார்.

மக்களுக்கு நன்றி

அவற்றில் அவர் கூறி இருந்ததாவது:–

தேர்தல் வெற்றி அபாரமானது. அதை மிக்க பணிவுடன் ஏற்கிறேன். பாரதீய ஜனதா கட்சி மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இதுவரை இல்லாத அளவுக்கு பாரதீய ஜனதா கட்சி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் ஆதரவை பெற்றுள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அமித் ஷாவுக்கு பாராட்டு

பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களின் கடுமையான உழைப்புக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் அடிமட்ட அளவில் இருந்து, ஓய்வு ஒழிச்சலின்றி மிகக்கடுமையாக உழைத்தார்கள். அவர்கள் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்திருக்கிறார்கள்.

இந்த வெற்றிக்காக, கட்சியை புதிய உயரங்களுக்கு எடுத்துச்சென்றதில் அமித் ஷா, கட்சி நிர்வாகிகள் மற்றும் மாநில கட்சித்தலைவர்களின் மிகச்சிறப்பான உழைப்புக்கு எனது பாராட்டுகள்.

ஒவ்வொரு கணத்திலும், நாங்கள் நாட்டு மக்களின் நலன்களுக்காக பாடுபடுகிறோம். நாட்டின் 125 கோடி மக்களின் சக்தி மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ராகுலுக்கு நன்றி

தேர்தல் வெற்றிக்காக தனக்கு பாராட்டு தெரிவித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு நரேந்திர மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ‘‘நன்றி. ஜனநாயகம் வாழ்க’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story