15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது உத்திரபிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி


15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது உத்திரபிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி
x
தினத்தந்தி 12 March 2017 12:15 AM GMT (Updated: 11 March 2017 9:30 PM GMT)

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று, 3-ல் 2 பங்குக்கும் அதிகமான மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்து உள்ளது.

புதுடெல்லி

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் உத்தரபிர தேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.

உத்தரபிரதேசம்

பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ஒழித்தது பற்றி பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த தேர்தல் நடந்தது. எனவே இந்த தேர்தல் முடிவு மத்திய அரசின் நடவடிக்கை குறித்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக அமையும் என்று கருதப்பட்டது.

இந்த 5 மாநிலங்களில் உத்தரபிரதேசம் இந்தியாவிலேயே பெரிய மாநிலம் என்பதால், அந்த மாநில தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் மற்ற கட்சிகளை விட பாரதீய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என தகவல் வெளியானது.

பாரதீய ஜனதா அமோக வெற்றி

இந்த நிலையில் 5 மாநிலங்களிலும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கருத்து கணிப்புகளையும் மிஞ்சும் வகையில், உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று உள்ளது.

மும்முனைப்போட்டி நிலவிய உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 384 இடங்களில் போட்டியிட்ட பாரதீய ஜனதா 312 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. அதாவது மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான மெஜாரிட்டியுடன் சமாஜ்வாடியிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், முதல்-மந்திரி வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே பிரதமர் மோடியின் செல்வாக்கை நம்பி தேர்தலை சந்தித்த பாரதீய ஜனதாவுக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவை அளித்து இருக்கிறார்கள்.

15 ஆண்டுகளுக்கு பிறகு...


உத்தரபிரதேசத்தில் இதற்கு முன் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை முதல்-மந்திரி ராஜ்நாத் சிங் (தற்போதைய மத்திய உள்துறை மந்திரி) தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்றது. அதன்பிறகு அங்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அங்கு பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி பீடத்தில் அமருகிறது.

2012-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 15 சதவீத வாக்குகளை பெற்று 40 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த பாரதீய ஜனதா, இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது.

பாரதீய ஜனதா கூட்டணியில் 12 இடங்களில் போட்டியிட்ட அப்னாதளம் (சோனேவால்) 9 இடங்களிலும், 7 இடங்களில் போட்டியிட்ட சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

நொய்டா சட்டசபை தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் வெற்றி பெற்றார்.

மோடியின் செல்வாக்கு

இதற்கு முன் 1991-ம் ஆண்டு நடைபெற்ற தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தை உள்ளடக்கிய ஒன்றுபட்ட உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 425 இடங்களில் 221 இடங்களை பாரதீய ஜனதா கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அப்போது அயோத்தி ராமர் கோவில் விவகாரம் மிகவும் தீவிரமாக இருந்தது. அதை விடவும் பாரதீய ஜனதாவுக்கு இப்போது மிகப்பெரிய வெற்றி கிடைத்து இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர பிரசாரத்துக்கும், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா வகுத்த தேர்தல் உத்திகளுக்கும் கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்து, சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று மோடி அளித்த வாக்குறுதிக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மக்களிடையே மோடிக்கு இருக்கும் செல்வாக்கை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

சமாஜ்வாடி-காங். கூட்டணி தோல்வி

இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாடியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சமாஜ்வாடி கட்சி 298 தொகுதிகளிலும், காங்கிரஸ் 105 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

சமாஜ்வாடி தலைவரும், முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பல இடங்களில் இருவரும் கூட்டாக பிரசாரம் செய்தனர். என்றாலும் இந்த கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.

54 இடங்களிலேயே இந்த கூட்டணி வெற்றி பெற்றது. சமாஜ்வாடி கட்சிக்கு 47 இடங்களும், காங்கிரக்கு 7 இடங்களும் கிடைத்தன. இந்த தோல்வி அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமாஜ்வாடியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கட்சியில் உண்டான பிளவு, இந்த தேர்தலில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

பகுஜன் சமாஜ்

முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியின் பகுஜன் சமாஜ் 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அந்த கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. 19 தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது.

ராஷ்டிரீய லோக்தளம், நிர்பல் இந்தியன் சோசிஸ்ட் ஹமாரா ஆம் தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி கிடைத்தது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.

உத்தரகாண்ட்

உத்தரபிரதேசத்தின் அண்டை மாநிலமான உத்தரகாண்டில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை பறித்தது.

அங்கு மொத்தம் உள்ள 70 இடங்களுக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 57 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது. ஆளும் காங்கிரசுக்கு 11 இடங்கள் கிடைத்தன. 2 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

பஞ்சாப்

117 உறுப்பினர்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்று, சிரோமணி அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணியிடம் இருந்து ஆட்சியை பறித்தது.

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 20 இடங்களில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்தது. அதன் கூட்டணி கட்சியான லோக் இன்சாப் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன.

94 இடங்களில் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளத்துக்கு 15 இடங்களும், 23 இடங்களில் போட்டியிட்ட பாரதீய ஜனதாவுக்கு 3 இடங்களும் கிடைத்தன.

117 இடங்களில் தனித்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

கோவா

பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் கோவா மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அங்கு இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பட்ட முறையில் பெரிய கட்சியாக விளங்குகிறது. பாரதீய ஜனதாவுக்கு 13 இடங்கள் கிடைத்தன. கோவா பார்வர்டு கட்சி, மராட்டியவாடி கோமந்த கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளன. சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைத்தது. 3 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

மணிப்பூர்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 4 இடங்களும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. ஒரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மணிப்பூரில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இங்கும் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

உற்சாக கொண்டாட்டம்

விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாவுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி இருப்பது அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பாரதீய ஜனதாவுக்கு கிடைத்த வெற்றியை அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். 

Next Story