பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவு


பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவு
x
தினத்தந்தி 11 March 2017 11:30 PM GMT (Updated: 11 March 2017 10:00 PM GMT)

பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் முடிவு குறித்து தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

அமித் ஷா (பா.ஜனதா தலைவர்)

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மக்கள் வரலாற்று சிறப்புமிக்க முடிவை தந்திருக்கிறார்கள். இது நாட்டின் அரசியலுக்கு, செயல்திறனுக்கான அரசியலுக்கு புதிய வழியை காட்டும். சாதி, மத, பாரபட்ச அரசியல் இனி பின்னுக்கு தள்ளப்படும். உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்ததும், ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கியதும் பாரதீய ஜனதா வெற்றிக்கு உதவியுள்ளன.

பஞ்சாப்பில் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம். கோவாவிலும், மணிப்பூரிலும் நாங்கள் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மிக உயர்ந்த தலைவராக பரிணாமம் எடுத்திருக்கிறார். பாரதீய ஜனதாவின் அரசியல் எதிரிகளும் இதை ஏற்றுக் கொள்வார்கள்.

ராகுல் காந்தி  (காங்கிரஸ் துணைத்தலைவர்)

மக்களின் இதயங்களையும், மனங்களையும் வெற்றிகொள்கிற வரையில் எங்களுடைய போராட்டம் ஓயாது, தொடரும். உத்தரபிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். பஞ்சாப்பில் அமரீந்தர் சிங்குக்கு எனது பாராட்டுக்கள. பஞ்சாப்பில் எங்கள் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளதற்கும், ஆதரவு காட்டியதற்கும் அனைவருக்கும் நன்றி. வலிமையால் ஒன்றுபட்டுள்ள இந்தியாவில், நாம் நமது உறுதியான மதிப்பை அர்ப்பணித்துக்கொள்வோம் என்று காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சி தலைவர்)

நாங்கள் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து தொண்டர்களும் கடினமாக உழைத்தார்கள். எங்கள் போராட்டம் தொடரும்.

உமர் அப்துல்லா  (தேசிய மாநாடு கட்சி தலைவர்)


உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி பெற்ற வெற்றி, சிறிய குளத்தில் ஒரு சிற்றலை அல்ல. இது சுனாமி. மோடியை விட்டால் நாட்டில் இன்றைக்கு வேறு தலைவர் கிடையாது. இதே வேகத்தில் போனால் நாம் 2019 பாராளுமன்ற தேர்தலை மறந்து விட வேண்டியதுதான். நாம் இப்போதே நம்பிக்கையுடன் 2024 தேர்தலுக்கு திட்டமிடுவோம். பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா கட்சி வீழ்த்த முடியாத கட்சி அல்ல என்று காட்டுகிறது. ஆனால் விமர்சன அரசியலில் இருந்து சாதகமான மாற்று அரசியலுக்கு நாம் வியூகத்தை மாற்ற வேண்டும்.

சஞ்சய் ராவுத்  (சிவசேனா கட்சி தலைவர்)

பாரதீய ஜனதா கட்சியின் வெற்றியை வரவேற்கிறோம். இந்த வெற்றிக்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறோம். அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என நாங்கள் நம்புகிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

நரேந்திர மோடி அரசு பெற்றிருக்கிற அபரிமிதமான வெற்றி, நாட்டுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இந்துத்துவா முத்திரையை ஊக்கப்படுத்தும். அது நாட்டில் பிரிவினையை, தீங்கை ஏற்படுத்தும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி

உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு நான்கில் 3 பங்கு இடங்கள் கிடைத்துள்ளன. இது நாட்டில் உள்ள மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு பெருத்த பின்னடைவு ஆகும். உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி கட்டவிழ்த்து விட்ட இனவாதத்துக்கு கிடைத்த வெற்றி இது.

‘‘ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்கு அளிப்பார்கள்’’
– தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 5 மாநில தேர்தல் முடிவு குறித்து கூறியதாவது:–

5 மாநில தேர்தல்களில் மக்கள் தான் எஜமானர்களாக இருக்கக்கூடியவர்கள் என்ற அடிப்படையில் வாக்களித்து, வெற்றி பெற்று இருக்க கூடியவர்களுக்கு தி.மு.க. சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, 5 மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில், பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்து இருக்கக்கூடிய சூழ்நிலையை பார்க்கின்றபோது, விரைவில் தமிழகத்தில் நடைபெற இருக்கக்கூடிய தேர்தலிலும் நிச்சயமாக ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தேர்தல் எடுத்துக்காட்டாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர்  கூறினார்.

‘எதிர்பார்த்தபடி அமைந்த தேர்தல் முடிவு’
–டி.டி.வி. தினகரன்


அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கான அரசாக, மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு வழிகாட்டும் அரசாக நடத்தப்படுகிறபோது தான் ஆளுகிற இயக்கமே ஆட்சியை தக்க வைக்கும் அரசியல் புரட்சி நிகழ்கிறது என்பதை மனதில் கொண்டு, ஜெயலலிதா சூளுரைத்தது போல, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வே தமிழகத்தை ஆளும் என்கிற நன்நோக்கத்தையே இலக்காக முன்னெடுப்போம் என்றுரைத்து, இந்த சட்டமன்றத் தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் வெற்றிகளை ஈட்டியிருக்கும் பா.ஜ.க.வுக்கும், ஏறத்தாழ 10 வருடங்களுக்குப் பிறகு பஞ்சாப்பில் அரியணை ஏறும் காங்கிரஸ் கட்சிக்கும், அதுபோலவே பா.ஜ.க.விடம் இருந்து கோவா மாநிலத்தை கைப்பற்றியதோடு, மணிப்பூரில் தங்களது ஆட்சியை தக்க வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அ.தி.மு.க. சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘‘மோடிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகவில்லை’’
– தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்


5 மாநில தேர்தல் முடிவு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:–

5 மாநில தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்து உள்ளனர். இதை மோடி, ராகுல்காந்தி இடையே நடந்த பலப்பரீட்சையாகவோ, மோடி அரசின் சாதனையாகவோ அளவிட முடியாது. அந்தந்த மாநிலத்தில் கட்சிகளின் செயல்பாடுகள், பிரச்சினைகள் அடிப்படையில்தான் பார்க்க வேண்டும்.

இது நாடாளுமன்றத்துக்கான முன்னோட்டமாக நடந்த தேர்தலாகவோ, அதற்கான பரீட்சை என்றோ எடுத்துக்கொள்ள முடியாது. இந்த தேர்தல் வெற்றியால் மோடிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகவில்லை. நிச்சயமாக மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ‘‘உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா கட்சிக்கு அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்துள்ளது.

இந்த வெற்றிக்கு மூலக்காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

Next Story