வீரர்களின் தியாகங்கள் வீண் போகாது: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்


வீரர்களின் தியாகங்கள் வீண் போகாது: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 12 March 2017 3:15 AM GMT (Updated: 2017-03-12T08:44:46+05:30)

நமது வீரர்களின் தியாகங்கள் ஒரு போதும் வீண் போகாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்து இருக்கிறார்.

ராய்பூர்,

மத்திய பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலை காட்டு மிராண்டித்தனமானது என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நமது வீரர்களின் தியாகங்கள் ஒரு போதும் வீண் போகாது என்று தெரிவித்துள்ளார். 

ராய்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜ்நாத் சிங் கூறுகையில், “ பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது துரதிருஷ்டவசமானது, வருத்தமளிக்க கூடியது. வீரர்களின் தியாகத்திற்கு நான் தலைவணங்குகிறேன். பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி காட்டுமிராண்டித்தனமான செயலை நக்சலைட்டுகள் அரங்கேற்றியுள்ளனர். மிகப்பெரும் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிவுறும் தருவாயில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

வீரர்களின் தியாகத்திற்கு நான் தலைவணங்குகிறேன். நமது வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று நான் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொல்ல விரும்புகிறேன். மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகள் வேகமாக பலவீனப்பட்டு வருகிறது. எனவே, அதிருப்தி மற்றும் விரக்தி காரணமாக இத்தகைய செயலை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்”  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று, சத்தீஸ்காரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை ராணுவத்தினர் மீது அங்கு வந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 12 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.பாதுகாப்பு படையினர் மீது சிலமணி நேரம் தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள், பின்னர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினர். உயிரிழந்த வீரர்களிடம் இருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ரேடியோ கருவிகளையும் அவர்கள் கொள்ளையிட்டு சென்றனர்.

Next Story