உத்தர பிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைத்திருந்தால் பா.ஜனதாவை வீழ்த்தி இருக்கலாம்: நிதிஷ்குமார் கருத்து


உத்தர பிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைத்திருந்தால் பா.ஜனதாவை வீழ்த்தி இருக்கலாம்: நிதிஷ்குமார் கருத்து
x
தினத்தந்தி 12 March 2017 5:06 AM GMT (Updated: 12 March 2017 5:06 AM GMT)

பீகாரைப்போன்று உத்தர பிரதேசத்திலும் மெகா கூட்டணி அமைத்து இருந்தால் பாஜகவை வீழ்த்தியிருக்கலாம் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


பாட்னா, 

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசம், உத்தர காண்ட் மாநிலங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவுக்கும், பஞ்சாப்பில் வெற்றி பெற்று இருப்பதுடன் மணிப்பூர், கோவா மாநிலங்களில் அதிக இடங்களை பிடித்திருக்கும் காங்கிரசுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று இருந்தாலும் அங்கு எதிர்க்கட்சிகள் சரியான போட்டியை உருவாக்காததால் தான் பாரதிய ஜனதா வெற்றி பெற்று இருக்கிறது.

பீகாரில் பாரதிய ஜனதா எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினோம். நாங்கள் அனைவரும் ஒரே குறிக்கோளாக நின்று போராடி அந்த கட்சியை தோற்கடித்தோம். ஆனால், உத்தரபிர தேசத்தில் அப்படி ஒரு மெகா கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறி விட்டன. அங்கு பிற்படுத்தப்பட்ட மக்களின் ஓட்டுகள் தற்போது பாரதிய ஜனதாவுக்கு கிடைத்து இருக்கின்றன. இந்த ஓட்டுகளை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பெற்று இருந்தால் பாரதிய ஜனதா வெற்றி பெற்று இருக்க முடியாது.ரூபாய் நோட்டு பிரச்சினையில் எதிர்க் கட்சிகள் இவ்வளவு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அந்த பிரச்சினையில் ஏழை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. பெரும் பணக்காரர்கள்தான் பாதிக்கப்பட்டார்கள்.

எனவே, பணக்காரர்களுக்காக போராடியது போல் அது ஆகி விட்டது. இந்த வி‌ஷயத்தில் அவர்கள் போராடியதை தேர்தல் பணியில் ஒற்றுமையாக இருந்து காட்டி இருந்தால் நிச்சயமாக பாரதிய ஜனதா இந்த வெற்றியை பெற்று இருக்காது. உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை எதிர்க் கட்சிகள் தவறு செய்து விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story