கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா உரிமை கோரியது


கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா உரிமை கோரியது
x
தினத்தந்தி 13 March 2017 12:15 AM GMT (Updated: 2017-03-13T01:38:01+05:30)

கோவாவில் மனோகர் பாரிக்கர் முதல்- மந்திரியாக பாரதீய ஜனதா மேலிடம் நேற்று ஒப்புதல் அளித்தது.

பனாஜி

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட்டன.

இழுபறி

இதில் உத்தரபிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சி அமைக் கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அந்த மாநிலங்களில் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வருகின்றன.

கோவா

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 13 இடங்களும் கிடைத்தன. இதுதவிர, மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகள் தலா 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளனர். சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வென்றது. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.

கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும் என்றால் மேலும் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலை உருவானது.

மனோகர் பாரிக்கர்

இதற்கிடையே, தற்போது ராணுவ மந்திரியாக இருக்கும் மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா அரசியலுக்கு திரும்பி முதல்-மந்திரி பதவியை ஏற்க வேண்டும் என அந்த மாநில பாரதீய ஜனதா கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற பாரதீய ஜனதா ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், மனோகர் பாரிக்கர் கோவா அரசியலுக்கு திரும்பி முதல்-மந்திரியாக பதவி ஏற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுபற்றி மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், “கோவா முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் முன் ராணுவ மந்திரி பதவியை மனோகர் பாரிக்கர் ராஜினாமா செய்வார்” என்றார்.

கவர்னருடன் சந்திப்பு

இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் நேற்று மாலை பனாஜி நகரில் கோவா கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து, தனக்கு 22 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார்.

கோவா பார்வர்டு கட்சி, மராட்டியவாடி கோமந்த கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த தலா 3 எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஆகியோர் தன்னை ஆதரிப்பதாக கூறி அவர்களுடைய ஆதரவு கடிதத்தையும் அப்போது கவர்னரிடம் மனோகர் பாரிக்கர் வழங்கினார்.

மணிப்பூர்

மணிப்பூர் மாநில சட்ட சபையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 60. இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 31 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு 28 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 21 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க மேலும் 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு மேலும் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்த நிலையில், 4 உறுப்பினர்களை கொண்ட தேசிய மக்கள் கட்சி, ஒரு உறுப்பினரை கொண்ட லோக் ஜனசக்தி ஆகியவை பாரதீய ஜனதாவை ஆதரிக்க முன்வந்து உள்ளன. மேலும் 4 உறுப்பினர்களை கொண்ட நாகா மக்கள் முன்னணி மற்றும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை பாரதீய ஜனதா வகுத்து வருகிறது.

இதுபற்றி பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் இம்பால் நகரில் நிருபர்களிடம் கூறுகையில், “ஏற்கனவே எங்களுக்கு சிலரின் ஆதரவு கிடைத்து இருக்கிறது. மற்றவர்களும் ஆதரிக்கும் பட்சத்தில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்று விடுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ்

இதற்கிடையே, இம்பாலில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை தலைவராக தற்போதைய முதல்-மந்திரி இபோபி சிங் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

காங்கிரசும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

Next Story