சாலையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த 60 வயது பிச்சைக்கார பெண்மணி


சாலையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த 60 வயது பிச்சைக்கார பெண்மணி
x
தினத்தந்தி 13 March 2017 7:54 AM GMT (Updated: 2017-03-13T13:24:24+05:30)

சாலையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு,60 வயது பிச்சைக்கார பெண்மணி ஒருவர் பிரசவம் பார்க்க உதவியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் சன்னா பசார் பகுதியைச் சேர்ந்த ராமண்ணா -எல்லம்மா தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அவர் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.இந்நிலையில் எல்லம்மாவுக்கு ரத்த சோகை இருப்பதால்,ராய்ச்சூரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்லுமாறு உள்ளூர் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து ராமண்ணாவும்,எல்லம்மாவும் ராய்ச்சூருக்கு சென்று விட்டு பேருந்து நிலையம் திரும்பியுள்ளனர்.

பேருந்தை விட்டு இறங்கியது எல்லம்மாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.வலி தாங்க முடியாமல் அங்கிருந்த சாலையில் விழுந்து அவர் அலறித் துடித்துள்ளார்.அந்த நேரத்தில் அவருக்கு இரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென அங்கு வந்த 60 வயது மதிக்கத்தக்க பிச்சை எடுக்கும் பெண்மணி ஒருவர்,எல்லம்மாவுக்கு பிரசவம் பார்க்க துவங்கியுள்ளார்.சில நிமிடங்களுக்கு பிறகு வேறு சில பெண்களும் அங்கு வர,எல்லம்மாவுக்கு சுகப் பிரசவம் நடந்து அவர்கள் நினைத்தபடி பெண் குழந்தையும் பிறந்துள்ளது.இதனைத் தொடர்ந்து தாயும்,சேயும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சில மணி நேரங்களுக்கு பிறகு தன்னுடைய மனைவியையும்,குழந்தையையும் காப்பாற்றிய அந்த பிச்சைக்கார பெண்மணியை ராமண்ணா தேடியுள்ளார்.ஆனால் அங்கு அந்த பெண்மணி இல்லை.மனித நேயம் என்பது பணம் உள்ளவர்களிடமிருந்துதான் வெளிவர வேண்டும் என இல்லை, பணமில்லாதவர்களுக்கும் மனித நேயம் உண்டு என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

Next Story