மணிப்பூர் மாநில பா.ஜனதா சட்டப்பேரவை தலைவராக என் பிரன்சிங் தேர்வு


மணிப்பூர் மாநில பா.ஜனதா சட்டப்பேரவை தலைவராக என் பிரன்சிங் தேர்வு
x
தினத்தந்தி 13 March 2017 1:24 PM GMT (Updated: 2017-03-13T18:54:20+05:30)

மணிப்பூர் மாநில பா.ஜனதா சட்டப்பேரவை தலைவராக என் பிரன்சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இம்பால், 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கிறது. 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவுக்கு 21 இடங்கள் கிடைத்தன. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட பிடிக்காத பா.ஜனதா 21 தொகுதிகளில் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 4 இடங்களும், லோக் ஜனசக்தி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. இதர கட்சிகள் உதவியுடன் அங்கு பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கிறது.

கவர்னர் நஜ்மா கெப்துல்லா முதல்-மந்திரி இபோபி சிங்கை பதவியை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டார். பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பதற்கு காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு எழுந்து உள்ளது. மணிப்பூர் முதல்-மந்திரி இபோபி சிங், இன்று அல்லது நாளை எனது ராஜினாமா கடிதத்தை வழங்குவேன் என கூறிஉள்ளார். 

இதற்கிடையே மணிப்பூர் மாநில பா.ஜனதா சட்டப்பேரவை தலைவராக என் பிரன்சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விரைவில் அவர் கவனர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் என மத்திய மந்திரி பியூஸ் கோயல் அறிவித்து உள்ளார். இதனையடுத்து பிரன்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமித் ஷா, மோடி ஜி மற்றும் மூத்த தலைவர்களுக்கு நன்றி. காங்கிரஸ் மோசமான ஆட்சி காரணமாக வெளியேற்றப்பட்டது. பாரதீய ஜனதா நல்ல அரசை மணிப்பூருக்கு கொடுக்கும். 

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி பேசுகையில் நாங்கள் பெரும்பான்மையை விட 2 இடங்கள் மட்டுமே குறைவாக பெற்று உள்ளோம். தனிப் பெரும்பான்மை கொண்ட கட்சியையே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். இது கவர்னரை சார்ந்தது என கூறிஉள்ளார். 

Next Story