கோவாவில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வழக்கு


கோவாவில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வழக்கு
x
தினத்தந்தி 13 March 2017 3:00 PM GMT (Updated: 2017-03-13T20:30:05+05:30)

கோவாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

புதுடெல்லி,
 
40 உறுப்பினர்களை கொண்ட கோவா மாநில சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 17 இடங்களும், பா.ஜனதாவுக்கு 13 இடங்களும், மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகளுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றது. ஆட்சி அமைக்க தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கு போட்டி போட்டன. 

தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்ததால் அந்த கட்சி மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. பிற கட்சிகள் ஆதரவை பெற்று பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது. கோவா மாநில முதல்-மந்திரியாக மனோகர் பாரிக்கர் நாளை மாலை பதவி ஏற்கிறார். பாரிக்கருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது. 4-வது முறையாக அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். 

இந்தநிலையில், தனிப் பெரும்கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து, காங்கிரஸ் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது. 

இது குறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கட்சி மேலிடத்தை வறுத்து எடுத்து விட்டனர். இதுபற்றி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு கட்சி மேலிடமே காரணம். மேலிட தலைவர்கள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை உரியநேரத்தில் தேர்ந்தெடுக்க தவறிவிட்டனர். இந்த தாமதத்தால்தான் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டு விட்டது. ஒட்டுமொத்தமாக கட்சி மேலிடம் இதில் தவறிழைத்து விட்டது என்று புலம்பினர்.

இந்நிலையில் கோவாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. அதிக எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கட்சியையே கவர்னர் முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மனுவை உடனடியாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

Next Story