பாராளுமன்ற இடைத்தேர்தல்; பிடிபியுடன் கூட்டணி கிடையாது, தனித்தே போட்டி பா.ஜனதா அறிவிப்பு


பாராளுமன்ற இடைத்தேர்தல்; பிடிபியுடன் கூட்டணி கிடையாது, தனித்தே போட்டி பா.ஜனதா அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2017 11:54 AM GMT (Updated: 14 March 2017 11:54 AM GMT)

பாராளுமன்ற இடைத்தேர்தலில் காஷ்மீரில் பிடிபியுடன் கூட்டணி கிடையாது, தனித்தே போட்டியிடுவோம் என பாரதீய ஜனதா அறிவித்து உள்ளது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) மற்றும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. பயங்கரவாதம் மற்றும் வன்முறையாளர்கள் மீதான நடவடிக்கையில் இருதரப்பு இடையே வேறுபாடுகள் இருந்தாலும் ஆட்சி தொடர்கிறது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல்களில் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் கூட்டணி ஆட்சியை பறி கொடுத்தது. கோவாவில் ஆட்சி பறிபோன நிலையில் இதர கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைக்கிறது. மணிப்பூரில் இரண்டாவது இடம் பிடித்து பிற கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் பாராளுமன்ற இடைத் தேர்தலில் காஷ்மீரில் பிடிபியுடன் கூட்டணி கிடையாது, தனித்தே போட்டியிடுவோம் என பாரதீய ஜனதா கூறிஉள்ளது.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் ஆனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 9-ம் தேதியும், ஆனந்த்நாக் பாராளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜனதா கட்சியின் மீடியா பிரிவு செயலாளர் அல்தாப் தாகூர் பேசுகையில், இரு தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சி பிடிபியுடன் கூட்டணி வைக்காது. இரு தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும். பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அசோக் கவுல் அறிவித்து உள்ளார். பாரதீய ஜனதாவினர் கட்சியின் வெற்றிக்காக பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்து உள்ளார் அசோக் கவுல். 

“இரு பாராளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விரைவில் பா.ஜனதா அறிவிக்கும்,” என்றும் கவுல் கூறிஉள்ளார். 

தேர்தலுக்கு முன்னதாக யாருடனும் கூட்டணி கிடையாது. தனித்தே போட்டியிட வேண்டும் என கட்சி தீர்மானித்துவிட்டது. கட்சியின் உயர்மட்ட குழுவானது விரைவில் வேட்பாளர்கள் பெயரை அறிவிக்கும். பிடிபியுடன் தொகுதி விவகாரம் தொடர்பாக உடன்பாட்டுக்கு வருமாறு எந்தஒரு கோரிக்கையும் இல்லை என பா.ஜனதா தரப்பு தெரிவித்து உள்ளாது. காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்த முப்தி முகமது சயத் கடந்த வருடம் உயிரிழந்தார், இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மெகபூபா முப்தி முதல்-மந்திரியானார். இதனால் ஆனந்த்நாக் தொகுதி காலியாக உள்ளது. பிடிபி சார்பில் ஸ்ரீநகரில் போட்டியிட்டு எம்.பி. ஆன தாரிக் ஹமீத் கெர்ரா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து காங்கிரசில் சேர்ந்தார். இதனால் ஸ்ரீநகர் தொகுதியும் காலியாக உள்ளது. இரு தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

Next Story