கோவா மாநில முதல்-மந்திரியாக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுக்கொண்டார்


கோவா மாநில முதல்-மந்திரியாக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுக்கொண்டார்
x
தினத்தந்தி 14 March 2017 12:13 PM GMT (Updated: 14 March 2017 12:13 PM GMT)

கோவா முதல்–மந்திரியாக 4–வது முறை மனோகர் பாரிக்கர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

பனாஜி,
 
40 உறுப்பினர்களை கொண்ட கோவா மாநில சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 17 இடங்களும், பா.ஜனதாவுக்கு 13 இடங்களும், மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி, சுயேச்சைகளுக்கு தலா 3 இடங்களும் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தில் வென்றது.

ஆட்சி அமைக்க தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கு போட்டி போட்டன. தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்ததால் அந்த கட்சி மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. ஆட்சி அமைப்பது தொடர்பாக மராட்டியவாடி கோமந்த கட்சி, கோவா பார்வர்டு கட்சி மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை உடனடியாக மாநில பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது, ஏற்கனவே கோவாவில் முதல்–மந்திரியாக இருந்து பின்னர் தேசிய அரசியலுக்கு சென்ற மனோகர் பாரிக்கர் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பினால் அவரை ஆதரிக்க தயார் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து கோவா அரசியலில் விறுவிறு காட்சிகள் அரங்கேறின. கோவா மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் ஒன்று கூடி ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரை கோவா சட்டசபை பா.ஜனதா தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று பா.ஜனதா தலைமையை கேட்டுக் கொண்டனர். 

இதற்கு டெல்லியில் பா.ஜனதா மேலிடமும் ஒப்புக் கொண்டது. இதையடுத்து பாரிக்கர் கோவா முதல்–மந்திரியாக பதவியேற்பதற்கு வகை செய்யும் விதமான ராணுவ மந்திரி பதவியில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பனாஜி திரும்பிய பாரிக்கர் 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களுடன் மாநில கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை உறுதி செய்து கொண்ட கவர்னரும் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்தார். 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படியும் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ராணுவ மந்திரி பதவியை பாரிக்கர் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கிடையே இவ்விவகாரத்தை காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டு கொண்டு சென்றது. 

ஆனால் கோவா முதல்-மந்திரியாக மனோகர் பாரிக்கர் பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்ற காங்கிரஸ் மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு மனோகர் பாரிக்கர் பதவியேற்க அனுமதியளித்ததோடு 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கோவா மாநில முதல்–மந்திரியாக பாரிக்கர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மிருதுளா சின்கா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மனோகர் பாரிக்கருடன் அமைச்சர்களும் பதவி ஏற்று வருகிறார்கள்.

2012–ம் ஆண்டு கோவா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த 61 வயது மனோகர் பாரிக்கர், 2000–2002–ம் ஆண்டு வரையிலும், 2002–2005–ம் ஆண்டு வரையிலும் பின்னர், 3–வது முறையாக 2012–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசில் ராணுவ மந்திரியாக பதவி ஏற்கும் வரை கோவா முதல்–மந்திரியாக பதவி வகித்தார். தற்போது 4–வது முறையாக அந்த மாநிலத்தின் முதல்–மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். 

Next Story