பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் கவர்னரை காங்கிரஸ் சந்திக்காதது ஏன்? மனோகர் பாரிக்கர்


பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் கவர்னரை காங்கிரஸ் சந்திக்காதது ஏன்? மனோகர் பாரிக்கர்
x
தினத்தந்தி 14 March 2017 1:28 PM GMT (Updated: 14 March 2017 1:27 PM GMT)

பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் கவர்னரை காங்கிரஸ் சந்திக்காதது ஏன்? என மனோகர் பாரிக்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

பனாஜி,

40 உறுப்பினர்களை கொண்ட கோவா மாநில சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான 21 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் கிடைக்காத நிலையில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கு போட்டி போட்டன. இறுதியில் சிறிய கட்சிகள், சுயேட்சை உதவியுடன் பா.ஜனதா ஆட்சி அமைத்து உள்ளது. பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மணிப்பூர், கோவாவில் பாரதீய ஜனதா ஆட்சியை திருடிவிட்டது என காங்கிரஸ் சாடிஉள்ளது.

இதற்கிடையே இவ்விவகாரத்தை காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்து சென்றது. ஆனால் கோவா முதல்-மந்திரியாக மனோகர் பாரிக்கர் பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்ற காங்கிரஸ் மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு மனோகர் பாரிக்கர் பதவியேற்க அனுமதியளித்ததோடு 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கோவா மாநில முதல்–மந்திரியாக பாரிக்கர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர் பேசுகையில் பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் கவர்னரை காங்கிரஸ் சந்திக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

கோவா பாரதீய ஜனதா ஆட்சியின் போது கண்ட வளர்ச்சியின் காரணமாகவே பிற கட்சிகள் பா.ஜனதாவிற்கு ஆதரவு அளித்து உள்ளன. எந்தஒரு எம்.எல்.ஏ.வும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க விரும்பவில்லை. தேர்தல் முடிவில் பிளவு உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளார்கள், வாக்கு பகிர்வு போதுமானதாக உள்ளது. இது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாகும் என மனோகர் பாரிக்கர் பேசிஉள்ளார். 

மனோகர் பாரிக்கர் போட்டியிட விரும்பினால் அவரை வரவேற்கிறோம் என்ற காங்கிரஸ் தலைவர் அபிசேக் சிங்வி, சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க நடத்தப்படும் வாக்கெடுப்பு தொடர்பாக பேசுகையில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது; எங்களுடன் போதுமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், நாங்கள் காத்திருப்போம், என்ன நடக்கிறது என பார்ப்போம் என கூறிஉள்ளார். 


Next Story