மணிப்பூரில் ஆட்சி அமைக்க காங்கிரசை அழைக்க தேவையில்லை கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா


மணிப்பூரில் ஆட்சி அமைக்க காங்கிரசை அழைக்க தேவையில்லை கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா
x
தினத்தந்தி 14 March 2017 2:26 PM GMT (Updated: 14 March 2017 2:26 PM GMT)

மணிப்பூரில் ஆட்சி அமைக்க காங்கிரசை அழைக்க தேவையில்லை என கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா பேசிஉள்ளார்.

இம்பால்,
 
நடைபெற்று முடிந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி இப்போது 28 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. ஆனால் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், ஆட்சி அமைப்பதற்கு 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

இரண்டாவது பெரிய கட்சியாக 21 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதா வந்துள்ளது. உதிரிக்கட்சிகளின் ஆதரவு இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை, மணிப்பூரில் ஏற்பட்டுள்ளது. இக்கட்சிகளின் ஆதரவு பா.ஜனதாவிற்கு உள்ளது. சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவராக இபோபி சிங்கும், பாரதீய ஜனதா தலைவராக பைரன் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருவருமே ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளனர். காங்கிரசும், பாரதீய ஜனதாவும் 4 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசிய மக்கள் கட்சி எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என கூறிவருகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. 

கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கிய நிலையில் அவரது முடிவுக்காக காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் காத்திருக்க தொடங்கின. உதிரிக்கட்சிகளின் நிலைப்பாட்டையும் நஜ்மா ஹெப்துல்லா கேட்டார். இந்நிலையில் பைரன் சிங் ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரியதை ஏற்றுக் கொண்டு கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து உள்ளார். நாளை பா.ஜனதா அரசு பதவி ஏற்கிறது. முதல்-மந்திரியாக என்.பைரன் சிங் பதவி ஏற்கிறார். அவருடன் பா.ஜனதா அமைச்சரவையும்  பதவி ஏற்கிறது.

 மணிப்பூரில் முதன் முதலாக பாரதீய ஜனதா ஆட்சி அமைய இருக்கிறது. இதன்மூலம் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி அங்கு முடிவுக்கு வருகிறது. பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் விளக்கம் அளித்து உள்ள கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா, மணிப்பூரில் காங்கிரஸ் தனிபெரும் கட்சி என்பது எனக்கும் தெரியும், ஆனால் ஆட்சியை தொடர்வதற்கான பெரும்பான்மை இல்லை. அரசியலமைப்பின் படி கவர்னருக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி மாநிலத்தில் அமையும் அரசின் நிலைத்தன்மையை ஆராய வேண்டியது கவர்னரின் பொறுப்பு ஆகும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி யாரிடம் மெஜாரிட்டி உள்ளது என்பதை கவர்னர் பார்க்கவேண்டும் மற்றும் மாநிலத்தில் நிலைத்தன்மைக்கு பணியாற்ற வேண்டும் என கூறிஉள்ளார்

Next Story