தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை மே 14–க்குள் நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + "||" + Supreme court refuses to interfere in court orders to Chennai

உள்ளாட்சி தேர்தலை மே 14–க்குள் நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

உள்ளாட்சி தேர்தலை மே 14–க்குள் நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு (2016) அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க இருந்தது.

புதுடெல்லி,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை மே 14–ந் தேதிக்குள் நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட முடியாது என்றும் அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு (2016) அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க இருந்தது. இதுதொடர்பாக தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை என்றும், எனவே தேர்தல் அறிவிப்பை ரத்து செய்வதாகவும்’ மேலும், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வரும் மே 14–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கெடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

மேல்முறையீட்டு மனு

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக கோவையை சேர்ந்த பி.கே.கணேசன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில் ‘மே மாதம் 14–ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தொகுதிகள் மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கணேசன் தரப்பில் மூத்த வக்கீல்கள் பி.பி.ராவ், பி.விஸ்வநாதன் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க. தரப்பில் வக்கீல் பி.வில்சன் ஆஜரானார்.

ஐகோர்ட்டு தீர்ப்பில் தலையிட மறுப்பு

மனுதாரர் வக்கீல் கூறுகையில், ‘1991–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்தலை நடத்தப் பார்க்கிறது தமிழக அரசு. இது தவறானது. சென்னை ஐகோர்ட்டு இதனை கணக்கில் எடுக்க தவறிவிட்டது. எனவே, மே மாதம் 14–ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி சீரமைப்பு பணிகள் முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்த வேண்டும்’ என்று கூறினார்.

இதற்கு தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கும், மனுதாரர் கோரிக்கைக்கும் தொடர்பு கிடையாது. இவை இரண்டும் வேறானவை’ என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட முடியாது என்றும், மனுதாரர் வேண்டும் என்றால் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.