டெல்லி மேல்–சபையிலும் ஜி.எஸ்.டி. மசோதாக்கள் நிறைவேறின


டெல்லி மேல்–சபையிலும் ஜி.எஸ்.டி. மசோதாக்கள் நிறைவேறின
x
தினத்தந்தி 7 April 2017 12:00 AM GMT (Updated: 2017-04-07T01:33:27+05:30)

டெல்லி மேல்–சபையிலும் ஜி.எஸ்.டி. மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால், ஜூலை 1–ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமலாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மேல்–சபையிலும் ஜி.எஸ்.டி. மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால், ஜூலை 1–ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமலாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

துணை மசோதாக்கள்

ஜி.எஸ்.டி. வரி தொடர்பான துணை மசோதாக்களாக கருதப்படும் மத்திய ஜி.எஸ்.டி. மசோதா, யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி. மசோதா, மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான ஜி.எஸ்.டி. மசோதா, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மசோதா ஆகியவை கடந்த 29–ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. அதில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து, மேற்கண்ட 4 மசோதாக்களும் டெல்லி மேல்–சபைக்கு அனுப்பப்பட்டன. அங்கு நேற்று முன்தினம் அவற்றின் மீது விவாதம் தொடங்கியது. நேற்றும் விவாதம் நடந்தது.

தி.மு.க. எம்.பி. பேச்சு

அதில், தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் பங்கேற்று பேசியதாவது:–

ஒரு மாநிலத்தின் மிகப் பெரும் உரிமையான விற்பனை வரி விதிக்கும் உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டதன் மூலம், மாநிலங்களை மாநகராட்சிகளாகத் தரம் குறைத்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு தேவை என மத்திய அரசு கூறுகிறது.

ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறை யாருக்காக? இந்திய மக்களுக்காகவா? இல்லை. இது இந்திய மக்களுக்கு உதவுவதற்காக இல்லை. இது இந்தியாவுக்கு வெளியே உள்ள மக்களுக்காக, இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்காகவும், இந்தியாவில் வணிகம் மேற்கொள்ளும் மற்ற நாட்டுக்காரர்களுக்காகவும் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

ஆபத்தான இந்தியா

இப்போது இந்த ஆட்சியில் முதல்கட்டமாக மாநிலங்கள் வரிவிதிக்கும் உரிமையை இழந்திருக்கின்றன. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. நம்முடைய பிரதமர் தன்னுடைய புதிய இந்தியா திட்டத்தை இதே பாணியில் கொண்டு செல்ல முடிவு செய்தால், அது ஆபத்தான இந்தியாவாக மாறும் என்று இந்த அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.

முதலில், சில பொருட்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். இன்றைக்கு பணக்காரர்கள் மட்டுமன்றி, சாதாரண மக்களும் 20 லிட்டர் குப்பிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரைத்தான் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தக் குடிநீருக்கு வரி விதித்தால், அது சாதாரண மக்களைப் பாதிக்கும். எனவே, அதற்கு வரி விதிப்பிலிருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுபோலவே, வீடு கட்டுவதற்குப் பயன்படும் செங்கற்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அருண் ஜெட்லி பதில்

இந்த விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியதாவது:–

ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்துக்கு அடுத்தடுத்து வந்த அரசுகள் பங்களிப்பு செய்துள்ளன. எனவே, இது ஒரு கூட்டு சொத்து என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை.

ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்த பிறகு, வர்த்தகர்களை ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகள் தொந்தரவு செய்யும் போக்கு இருக்காது. நாடு முழுவதும் ஒரு பொருளுக்கு ஒரேவிதமான வரியே இருக்கும். இந்த வரி விதிப்பு, பணவீக்கத்துக்கு வழி வகுக்காது. மத்திய, மாநில அரசுகளின் வருவாய் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிறைவேறியது

பின்னர், டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), தபன் குமார் சென், டி.கே.ரங்கராஜன் (இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) ஆகியோர் மசோதாக்களில் திருத்தங்கள் கொண்டு வந்தனர். ஆனால், அவை நிராகரிக்கப்பட்டன.

4 மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இதன்மூலம், இரு அவைகளிலும் இந்த மசோதாக்கள் நிறைவேறி விட்டன. அடுத்தபடியாக, மாநில ஜி.எஸ்.டி. மசோதாக்களை மாநில சட்டசபைகள் நிறைவேற்ற வேண்டும். அதையடுத்து, ஜூலை 1–ந் தேதி முதல், ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரும்.

பெட்ரோலுக்கு உற்பத்தி வரி நீடிக்கும்

தற்போது, உற்பத்தி வரி விதிக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் சேர்க்கப்படவில்லை. எனவே, ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்த பிறகும், இப்பொருட்களின் மீது உற்பத்தி வரிதான் நீடிக்கும்.

அதற்காக, சுங்க சட்டம்–1962, சுங்க கட்டண சட்டம்–1975, மத்திய உற்பத்தி சட்டம்–1944, நிதி சட்டம்–2001, நிதி சட்டம்–2005 ஆகிய சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை, பாராளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் கங்வார் தாக்கல் செய்தார். அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.


Next Story