எம்.பி.யின் விமான பயண தடை வாபஸ் ஆகுமா? பாராளுமன்றத்தில் மந்திரியை முற்றுகையிட்டு சிவசேனா அமளி


எம்.பி.யின் விமான பயண தடை வாபஸ் ஆகுமா? பாராளுமன்றத்தில் மந்திரியை முற்றுகையிட்டு சிவசேனா அமளி
x
தினத்தந்தி 6 April 2017 11:30 PM GMT (Updated: 6 April 2017 8:03 PM GMT)

எம்.பி.யின் விமான பயண தடையை வாபஸ் பெற வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் மந்திரியை முற்றுகையிட்டு சிவசேனா கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

எம்.பி.யின் விமான பயண தடையை வாபஸ் பெற வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் மந்திரியை முற்றுகையிட்டு சிவசேனா கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். 10–ந் தேதிக்குள் முடிவு எடுக்க கெடு விதித்தனர்.

செருப்பால் அடித்த விவகாரம்

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி., ரவீந்திர கெயிக்வாட், கடந்த 23–ந் தேதி புனேயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்ற போது, சொகுசு வகுப்பில் பயணிக்க முடியாமல் போனது. இதில் ஆத்திரம் அடைந்த அவர், 60 வயதான ஏர் இந்தியா நிறுவன மேலாளர் சுகுமாரை செருப்பால் அடித்த விவகாரம், நாடு முழுவதும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அவர் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தன.

முதல் முறையாக...

இந்த சம்பவத்துக்கு பின்னர் முதல்முறையாக ரவீந்திர கெயிக்வாட் எம்.பி., நேற்று பாராளுமன்றத்துக்கு வந்தார். அவர் நடந்த சம்பவம் தொடர்பாக பேசினார். அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். மாறாக ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள்தான் அவமதித்ததாக குற்றம் சாட்டினார்.

‘‘நான் ஆசிரியராக இருந்தவன், இயல்பாகவே பணிவானவன்’’ என அவர் கூறியபோது பல உறுப்பினர்கள் சிரித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘அந்த மேனேஜர் எம்.பி.க்களை அவமதித்தபோது, நான் அவரை முன்னே தள்ளி மட்டுமே விட்டேன். நான் அப்படி நடந்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் என்னை பலப்பிரயோகம் செய்த அவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்’’ என்று கூறினார். விமான பயணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தனது தரப்பில் சம்பந்தப்பட்ட காட்சி தொகுப்பு வீடியோவை சமர்ப்பித்தார்.

தடையை நீக்க மறுப்பு

இந்த விவகாரத்தில் சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூ பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர், ‘‘இந்த விவகாரம் ஒரு எம்.பி.யைப் பற்றியது அல்ல. ஒரு பயணியைப் பற்றியது ஆகும். விமானம் என்பது மக்கள் பயணம் செய்ய பயன்படுகிற ஒரு சாதனம் மட்டும்தான். அதில் பாதுகாப்பு என்பது முக்கியமானது. பாதுகாப்பு அம்சத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது’’ என்றார்.

மேலும், ‘‘இந்த விவகாரத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வருவதா அல்லது மேலும் தீவிரம் ஆக்குவதா என்பதை ரவீந்திர கெயிக்வாட்தான் தீர்மானிக்க வேண்டும். சட்டம் தனது கடமையை செய்யும்’’ என்று குறிப்பிட்டார்.

ரவீந்திர கெயிக்வாட் மீதான விமான பயண தடையை நீக்க முடியாது என உறுதிபட கூறினார்.

அமளி

இந்தப் பதில் சிவசேனா கட்சி எம்.பி.க்களுக்கு எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல ஆயிற்று. அவர்கள் மந்திரி அசோக் கஜபதி ராஜூவின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர் அமளி காரணமாக சபையை மீண்டும், மீண்டும் ஒத்திவைக்க நேர்ந்தது.

சிவசேனா கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி ஆனந்த் கீதேயும், சக கட்சி எம்.பி.க்களுடன் சேர்ந்து கொண்டார். அவர், ‘‘இது மக்களின் அரசாக இருக்கலாம். ஆனால், ஒரு தரப்பான முடிவை எடுத்தது வெட்கக்கரமானது, துயரமானது’’ என சாடினார்.

ரவீந்திர கெயிக்வாடுக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கல்யாண் பானர்ஜி குரல் கொடுத்தார். அவர், ‘‘ எந்த சட்டப்பிரிவின் கீழ் ரவீந்திர கெயிக்வாட் விமான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது?’’ என கேட்டார்.

அமைதி காத்தார்

மந்திரி ஆனந்த் கீதே உள்பட அத்தனைபேரும் தன்னை முற்றுகையிட்டு, தனக்கு எதிராக குரல் கொடுத்தபோதும், தனது மேஜையை அறைந்தபோதும், சிவில் விமானப்போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூ அமைதி காத்தார்.

நிலைமை மோசமானதை உணர்ந்த மத்திய மந்திரிகளும், பா.ஜனதா எம்.பி.க்களும் செய்வது அறியாது திகைத்து நின்றனர். மந்திரி ஆனந்த் கீதே, அசோக் கஜபதி ராஜூவை நோக்கி கோபத்தில் சத்தமிட்டார். அவரை அங்கிருந்து நகர விடவில்லை.

‘‘நாளை முதல் மும்பையில் இருந்து எந்த விமானமும் புறப்பட முடியாது’’ என சிவசேனா எம்.பி.க்கள் ஆவேசத்துடன் கூறினர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆனந்த் கீதே மற்றும் அவரது சகாக்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். இதற்கிடையே மந்திரி அசோக் கஜபதி ராஜூவை மற்றவர்கள் பத்திரமாக வெளியே அழைத்து சென்றனர்.

பலத்த பாதுகாப்பு

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் இணக்கமான தீர்வினை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மந்திரி அசோக் கஜபதி ராஜூ பேசுவார் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மும்பையில் இருந்து நாளை முதல் விமானங்கள் பறக்க முடியாது என சிவசேனா எம்.பி.க்கள் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, மும்பை, டெல்லி விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாக ஏர் இந்தியா விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

கெடு

இந்த பிரச்சினை தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், டெல்லியில் நிருபர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ‘‘இந்த பிரச்சினையில் 10–ந் தேதிக்குள் அரசு முடிவு எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அந்த நாளில் நடக்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். இதை எனது கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே அனுமதியுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்’’ என கூறினார். அப்போது ரவீந்திர கெயிக்வாட் உள்ளிட்ட சிவசேனா எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.


Next Story