தென் இந்தியர்களுக்கு எதிராக பா.ஜனதா தலைவர் தருண் விஜய் இனவெறி கருத்து; மன்னிப்பு கேட்டார்


தென் இந்தியர்களுக்கு எதிராக பா.ஜனதா தலைவர் தருண் விஜய் இனவெறி கருத்து; மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 7 April 2017 10:28 AM GMT (Updated: 7 April 2017 10:27 AM GMT)

நொய்டாவில் ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவின் நகர்வை ஆதரிக்கும் வகையில் பேசிய தருண் விஜய் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

 நொய்டாவில் போதைப் பொருள் பயன்படுத்திய சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்வதாக ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் தரப்பில் இனவெறி மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் என கூறப்பட்டது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பாக அல்-ஜசீரா நடத்திய விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய பா.ஜனதா தலைவர் தருண் விஜய் ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவின் நகர்வை ஆதரிக்கும் வகையில் பேசிய போது தென்இந்தியர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். 

தென் இந்தியர்களை குறிப்பிட்டு எங்களை சுற்றிலும் கருப்பின மக்கள் வாழ்கிறார்கள் என கூறிஉள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விவாதத்தில் பேசிய தருண் விஜய் நாங்கள் இனவெறியர்களாக இருந்து இருந்தால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா என தென் இந்தியர்களுடன் நாங்கள் எப்படி வாழ்வோம்? நாங்கள் எங்களை சுற்றிலும் கருப்பு நிற மக்களை கொண்டு உள்ளோம்,” என கூறிஉள்ளார். அவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்ததும் என்னுடைய கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு உள்ளது என விளக்கம் தெரிவித்து உள்ளார். இவ்விவகாரத்தில் இருந்து பா.ஜனதா ஒதுங்கி கொண்டது.

இவ்விகாரம் தொடர்பாக டுவிட்டரில் மக்களின் கோபமான பதிவுகளுக்கு பதிவிட்டு வருகிறார், அப்போது தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பும் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் மாறுபாடுகளை உள்ளடக்கிய கலாசாரத்தில் கருப்புநிற கிஷ்ணரை வழிபாடு செய்கிறோம், முதலில் நாம் இனவெறியை எதிர்த்தோம், பிரிட்டன் ஆட்சி காலத்தில் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். யாருடனும் நாம் இனவெறி கொண்டிருக்கவில்லை என விளக்கம் அளித்து உள்ளார். மேலும் டுவிட் செய்கையில் தேசத்தின் பலபகுதியில் நாம் பலதரப்பட்ட மக்களை கொண்டு உள்ளோம், நிறத்திலும், அவர்களுக்கு எதிராக நாம் எப்போதும் பாகுபாடு காட்டவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

என்னுடைய கருத்தை தெரிவிக்க என்னுடைய வார்த்தை போதுமானதாக இல்லாமல் இருந்திருக்கலாம், வருந்துகிறேன். என்னுடைய கருத்தை மீறி நான் மாறுபாடுடன் பேசியதாக உணர்கின்றவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என கூறிஉள்ளார். 
 
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் குஷ்பு பேசுகையில், தருண் விஜய் கருத்து வினோதமானது மற்றும் பொறுப்பற்றது. நிறம் எங்கிருந்து வந்தது... தருண் விஜயிடம் இருந்து வந்த இந்த கருத்தானது அதிர்ச்சியளிக்கிறது, நிறத்தை பார்ப்பதை நிறுத்தவேண்டிய நேரம்,” என கூறிஉள்ளார். கனிமொழி பேசுகையில் இது தேசவிரோத கருத்தாகும் என கூறிஉள்ளார். “பாரதீய ஜனதா அவருக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்கும் என நம்புகின்றேன்,” என கூறிஉள்ளார். 


Next Story