ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஒரு எம்.பி ரகளை: 30 நிமிடம் விமானம் தாமதம்


ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஒரு எம்.பி ரகளை: 30 நிமிடம் விமானம் தாமதம்
x
தினத்தந்தி 7 April 2017 11:33 AM GMT (Updated: 2017-04-07T17:02:55+05:30)

விமான ஊழியரை தாக்கியதால் சர்ச்சையில் சிக்கிய கெய்க்வாட் எம்.பியின் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மேலும் ஒரு எம்.பி ஏர்இந்தியா விமானத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த எம்.பி டோலா சென் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் புறப்படுவதில் 30 நிமிடம் தாமதம் ஆனது. விமானத்தின் அவசர வழி அருகே உள்ள இருக்கையில் இருந்து வேறு இருக்கையில் மாறி இருக்குமாறு எம்.பியின் வயதான தாயாரை விமான பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த எம்.பி டோலா சென் விமான பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளார். 

பாதுகாப்பு விதிமுறைகளை எம்.பி பின்பற்ற மறுத்ததால் ஏர் இந்தியா விமானம் புறப்படுவதில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. அண்மையில், ஏர் இந்தியா நிறுவன மேலாளரை சிவசேனா கட்சியின் எம்.பி ரவீந்திர கெய்க்வாட் தாக்கியதால் விமானத்தில் பறக்க தடைவிதிக்கப்பட்டு, பின்னர் பெரும் போராட்டத்துக்கு பிறகு இன்றுதான் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில், கெய்க்வாட் எம்.பிக்கு தடை நீக்கப்பட்டது. இந்த சம்பவம் முடிவுக்கு வந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு எம்.பி, ஏர் இந்தியா விமானத்தில் ரகளையில் ஈடுபட்டு இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story