அனைவருக்கும் வீடு திட்டம்; தனியார் கட்டுமான நிறுவங்களுடன் பிரதமர் சந்திப்பு


அனைவருக்கும் வீடு திட்டம்; தனியார் கட்டுமான நிறுவங்களுடன் பிரதமர் சந்திப்பு
x
தினத்தந்தி 7 April 2017 4:13 PM GMT (Updated: 2017-04-07T21:42:46+05:30)

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் - 2022 கீழ் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளை ஆராய நாளை பிரதமர் மோடி கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். இதில் தனியார் கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பும் கலந்து கொள்ளவுள்ளது.

புது டெல்லி

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் - 2022 கீழ் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளை ஆராய நாளை பிரதமர் மோடி கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். இதில் தனியார் கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பும் கலந்து கொள்ளவுள்ளது.

பிரதமர் அலுவலகம் இத்திட்டத்தில் தனியார் கட்டுமான நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ஆராய அவர்களின் கூட்டமைப்பையும் அழைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 சதவீத கடன் வட்டி மானியத்தைப் பெறுவதற்காக குறைந்த செலவில் வீடுகளை எப்படி விரைவாக கட்டுவது என்பது பற்றி கிரெடாய் எனும் கூட்டமைப்பு விளக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

இத்திட்டத்தில் குறைந்த செலவில் வீடுகளைக் கட்டுவதற்கு இதுவரை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு வரைவு திட்டமும் அரசுக்கு வரவில்லை, இது ஏமாற்றம் தருகிறது என்று நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியிருந்தார். இதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். 

நகரப்பகுதிகளில் ரூ.9 இலட்சம் கடன் வாங்கி வீடு கட்டினால் கடனுக்கான வட்டித் தொகையில் 4 சதவீதம் மானியம் பெறலாம். கடன் ரூ. 12 இலட்சம் என்றால் 3 சதவீத மானியம் கிடைக்கும். கிராமப்புறங்களில் ரூ. 2 இலட்சம் கடனுக்கான வட்டித் தொகையில் 3 சதவீதம் மானியம் கிடைக்கும். 

“கறுப்புப் பண புழக்கத்தால் நடுத்தர வர்க்க மக்கள் வீடு வாங்குவது என்பது கடினமாகிவிட்டது. எங்கள் அரசு அனைவருக்குமான வீடு கட்டும் திட்டத்தில் ஏழைகளும், நடுத்தர வர்க்கமும் வீட்டு வசதி பெற உறுதியளிக்கும் விதத்தில் பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார் பிரதமர் மோடி.


Next Story