செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வந்தவர் வெட்டிக் கொலை


செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வந்தவர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 7 April 2017 9:02 PM GMT (Updated: 7 April 2017 9:01 PM GMT)

செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மைனர் வாலிபர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை

செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மைனர் வாலிபர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழர்கள் ஆரே காலனி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெட்டிக்கொலை

மும்பை, ஆரே காலனி 7-வது யூனிட் பகுதியில் வசித்து வருபவர் இளையபெருமாள். இவரது மகன் வீரபாண்டியன்(வயது35). தமிழரான இவர் அந்த பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வந்தார். சமீபத்தில் இவர் கோரேகாவ் பிலிம் சிட்டியை பாதுகாக்கும் பணிக்கான டெண்டரை எடுத்தார். இது பிலிம் சிட்டியில் பல ஆண்டுகளாக பாதுகாவலர்களை நியமித்து வந்தவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீரபாண்டியன் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஆரே டைரி பகுதி கேண்டீனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் வீரபாண்டியனை அரிவாள் மற்றும் கத்தியால் பயங்கரமாக தாக்கியது. இதில், கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட உடலின் பல இடங்களில் வீரபாண்டியனுக்கு வெட்டு விழுந்தது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கிச்சரிந்தார்.

இந்த பயங்கர காட்சிகளை பார்த்து அங்கு நின்றவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே வீரபாண்டியனை தாக்கிய கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடியது.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வீரபாண்டியனை மீட்டு சதாப்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் குவிப்பு

இதற்கிடையே தமிழர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆரேகாலனி பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதையடுத்து திரண்ட தமிழர்கள் வீரபாண்டியனை கொலை செய்ததாக கருதப்படும் ஒருவருக்கு சொந்தமாக ஆரேகாலனியில் உள்ள குடோனை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து ஆரே காலனி பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் அன்றைய தினமே போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய ஆரே காலனி பகுதியை சேர்ந்த ஹைதர் அலி(30), மற்றும் அண்ணன், தம்பிகளான 2 மைனர் வாலிபர்களை கைது செய்தனர்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இதற்கிடையே வீரபாண்டியன் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆரேகாலனி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்ட பிறகே வீரபாண்டியனின் உடலை வாங்குவோம் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என போலீசார் அவர்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு விட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

மேலும் 3 பேர் கைது

இந்தநிலையில் போலீசார் வீரபாண்டியனை கொலை செய்த முக்கிய குற்றவாளியான மேலும் 3 பேரை நேற்று கைது செய்தனர். அவர்கள் பெயர் துரைசெல்லையா(48) அவரது தம்பி ராஜா செல்லையா(42), வெங்கடேஷ் ஆறுமுகம்(22) என்று தெரியவந்தது.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் கிரண்குமார் யாதவ் கூறும்போது, ‘இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளோம். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடிவருகிறோம். அவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

கொலை செய்யப்பட்ட வீரபாண்டியனின் சொந்த ஊர் தமிழகத்தில் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவில் உள்ள குப்பநத்தம் ஆகும். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு பாப்பாத்தி(28) என்ற மனைவியும், கெவின்(9), ரோஜர்(7) என்ற 2 மகன்களும் உள்ளனர்.


Next Story