ஆதிவாசி மக்கள் பெங்களூருவுக்கு நடைபயணம்


ஆதிவாசி மக்கள் பெங்களூருவுக்கு நடைபயணம்
x
தினத்தந்தி 7 April 2017 11:19 PM GMT (Updated: 2017-04-08T04:49:34+05:30)

திட்டள்ளி கிராமத்தில் வீடுகள் கட்டி கொடுக்க வலியுறுத்தி நேற்று ஆதிவாசி மக்கள் பெங்களூருவுக்கு நடைபயணத்தை தொடங்கினார்கள்.

குடகு,

திட்டள்ளி கிராமத்தில் வீடுகள் கட்டி கொடுக்க வலியுறுத்தி நேற்று ஆதிவாசி மக்கள் பெங்களூருவுக்கு நடைபயணத்தை தொடங்கினார்கள்.

தொடர் போராட்டம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா திட்டள்ளி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தில் வீடுகள் கட்டியிருந்ததாக கூறி ஆதிவாசி மக்களின் 575 வீடுகளை வனத்துறையினர் போலீசார் உதவியுடன் இடித்து தள்ளினார்கள். இதனால் கொதித்தெழுந்த அந்தப்பகுதி மக்கள் அதேப்பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதிவாசி மக்களின் இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு அமைப்பினரும் ஆதிவாசி மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால், ஆதிவாசி மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், ஆதிவாசி மக்கள், திட்டள்ளி பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுக்க வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் உள்ள ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தியும் திட்டள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு நடைபயணம் செய்ய முடிவு செய்தனர்.

பெங்களூருவுக்கு நடைபயணம்

இந்த நிலையில் ஆதிவாசி மக்களின் நடைபயணம் நேற்று திட்டள்ளி கிராமத்தில் இருந்து தொடங்கியது. இந்த நடைபயணத்தை பிரதமர் மோடிக்கு எதிராக போராடிய குஜராத் மாநில போராட்டக்குழுவை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி என்பவர் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ஜிக்னேஷ் மேவானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மத்திய–மாநில அரசுகள் ஒரே மாதிரியான மனநிலையில் உள்ளன. ஆதிவாசி மக்களுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் செய்யவில்லை. அதிலும் குறிப்பாக குடகு மாவட்டத்தில் ஆதிவாசி மக்கள் வசிக்கும் இடத்துக்கு அதிகாலை நேரத்தில் வந்து அவர்களை விரட்டியடிக்க அவசியம் என்ன?. திட்டள்ளி பகுதியில் ஆதிவாசி மக்கள் இருக்கும் பகுதியை சுற்றி காபி தோட்டங்கள் உள்ளன. அங்கு அவர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் ஆதிவாசி மக்கள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

அலட்சியபடுத்துவது சரியல்ல

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் இன்னும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினாலும் மத்திய–மாநில அரசுகள் கண்டுகொள்வது இல்லை. திட்டள்ளி பகுதியில் இடிக்கப்பட்ட இடத்தில் ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும், மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டள்ளியில் இருந்து பெங்களூருவுக்கு நடைபயணம் தொடங்கி உள்ளோம். இதிலும் முடிவு ஏற்படவில்லை என்றால் டெல்லிக்கு நடைபயணம் மேற்கொள்வேன். ஆதிவாசி மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் அவர்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். இது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நடைபயணத்தில் ஆதிவாசி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்கள் மத்திய–மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பியப்படி நடைபயணமாக சென்றனர்.


Next Story