தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீசார் தாக்குதல்


தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீசார் தாக்குதல்
x
தினத்தந்தி 7 April 2017 11:34 PM GMT (Updated: 7 April 2017 11:34 PM GMT)

ரிசர்வ் வங்கி நோக்கி சென்ற விவசாயிகள் மீது டெல்லி போலீசார் திடீர் தாக்குதல் நடத்தினர்.

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி நோக்கி சென்ற விவசாயிகள் மீது டெல்லி போலீசார் திடீர் தாக்குதல் நடத்தினர். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் 3 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர்.

ரத்தம் அர்ப்பணம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 14–ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 25–வது நாளாக நீடித்தது.

அவர்களில் சிலர் நேற்று காலை உள்ளங்கையில் பிளேடால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ‘மோடி அய்யா... மோடி அய்யா... விவசாயிகளை காப்பாற்றுங்கள் அய்யா’ என்று கோ‌ஷமிட்டனர். பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்து ஒருவர் அமர்ந்திருக்க அவருடைய பாதத்தில் விவசாயிகள் ரத்தத்தை அர்ப்பணம் செய்தனர்.

பாராளுமன்றம் நோக்கி...

பின்னர் ஜந்தர் மந்தர் சாலையில் விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது மோடி முகமூடி அணிந்தவரின் காலில் விழுந்து அவர்கள் கெஞ்சினார்கள். பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றது. அப்போது போலீசார் தடுப்பு வேலி அமைத்து அவர்களை தடுத்தனர்.

இதையடுத்து விவசாயிகளில் 25 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே, லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் போராட்ட களத்துக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

தாக்குதல்

இந்நிலையில் மாலையில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரிசர்வ் வங்கி நோக்கி சென்றனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் விவசாயிகள் சிலர் தாக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மத்திய போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விவசாயிகளை போலீஸ் வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 மணி நேரத்துக்கும் மேலாக விவசாயிகள் சிறை வைக்கப்பட்டனர்.

விடுதலை

விசாரணைக்கு பிறகு விவசாயிகளை போலீசார் இரவு விடுவித்தனர். பின்னர் போராட்டகளத்துக்கு வந்த அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:–

ரிசர்வ் வங்கி கவர்னர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறப்பட்டு இருந்தது. இது நியாயம் இல்லை என முறையிட ரிசர்வ் வங்கிக்கு சென்றோம். அப்போது போலீசார் எங்களை தடுத்து தாக்கினார்கள். இதில் சிலர் காயம் அடைந்தோம்.

பிரதமரை சந்திக்கிறோம்

போலீசார் எங்களை ரெயிலில் ஏற்றி ஊருக்கு அனுப்புவதாக கூறினார். ஆனால் நான், ‘நாங்கள் அபாய சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி விட்டு மீண்டும் டெல்லிக்கு வந்து விடுவோம்’ என்று கூறினேன். பின்னர், ‘இனிமேல் போராட்ட களத்தைவிட்டு எங்கு சென்றாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி எங்களை அனுப்பி வைத்தனர். மேலும் நாளை (அதாவது இன்று) பிரதமரை சந்திக்க அழைத்து செல்வதாகவும் கூறினர்.

பிரதமர் மோடி எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தாவிட்டால் மீண்டும் போராடுவோம். பிரதமரிடம் போலீசார் அழைத்து செல்லாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கி விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story