விமான பயணத்துக்கு அனுமதி மறுப்பு: சிவசேனா எம்.பி.க்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ்


விமான பயணத்துக்கு அனுமதி மறுப்பு: சிவசேனா எம்.பி.க்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ்
x
தினத்தந்தி 7 April 2017 11:37 PM GMT (Updated: 7 April 2017 11:37 PM GMT)

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாடின் விமான பயணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஏர் இந்தியா வாபஸ் பெற்றது.

புதுடெல்லி,

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாடின் விமான பயணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஏர் இந்தியா வாபஸ் பெற்றது.

எம்.பி.யின் பயணத்துக்கு தடை

மராட்டிய மாநிலம் உஸ்மானாபாத் பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரவீந்திர கெய்க்வாட். சிவசேனா எம்.பி.யான இவர், கடந்த மாதம் 23–ந்தேதி புனே நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்தில் அவருக்கு சாதாரண பயணிகள் இருக்கைதான் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திர கெய்க்வாட் டெல்லி சென்றதும் விமானத்தில் இருந்து இறங்காமல் அதிலேயே உட்கார்ந்து இருந்தார்.

இதுபற்றி கேள்வி எழுப்பிய ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரி சுகுமாரை அவர் பலமுறை செருப்பால் அடித்தார். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்த ஏர் இந்தியா நிறுவனம் அவரை தங்களது விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது.

சிவசேனா எச்சரிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம், பாராளுமன்றத்தில் ரவீந்திர கெய்க்வாட் பேசினார். தன்னை ஏர் இந்தியா அதிகாரி அவமதித்ததால்தான் அவரை தள்ளிவிட்டேன் எனவே விமான பயணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். எனினும், சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூ இதை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால் இந்த பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று சிவசேனா எச்சரிக்கை விடுத்தது.

தடை வாபஸ்

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ரவீந்திர கெய்க்வாட் நேற்று முன்தினம் இரவு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மந்திரி அசோக் கஜபதி ராஜூவுக்கு கடிதம் எழுதினார்.

இதைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் மீதான தடையை திரும்ப பெறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு ரவீந்திர கெய்க்வாட், தங்களது விமானங்களில் பயணம் செய்வதற்கு விதித்திருந்த தடையை வாபஸ் பெறுவதாக ஏர் இந்தியா நேற்று அறிவித்தது. இதனால் கடந்த 2 வாரங்களாக நீடித்து வந்த இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.


Next Story