தானே போலி கால்சென்டர் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது


தானே போலி கால்சென்டர் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 8 April 2017 8:20 PM GMT (Updated: 2017-04-09T01:49:47+05:30)

தானே போலி கால் சென்டர் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சாகர் தாக்கர், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தானே,

தானே போலி கால் சென்டர் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சாகர் தாக்கர், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கால்சென்டர் மோசடி

தானே மிரா ரோட்டில் போலி கால்சென்டர் நடத்தி, அமெரிக்க பிரஜைகளை தொடர்பு கொண்டு பேசி நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மோசடி அரங்கேறியது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளிச்சத்துக்கு வந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய கால்சென்டர் நிர்வாகிகள், ஊழியர்கள் என மொத்தம் 70–க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 630 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த மாபெரும் நூதன மோசடிக்கு சாகர் தாக்கர் என்பவர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவருக்கு ‘குரு’வாக செயல்பட்ட ஜெக்தீஷ் கனானி (வயது 33) என்பவர், போலீசாரிடம் சிக்கினார். அவர் ஏற்கனவே பல்வேறு வெளிநாடுகளில் கால்சென்டர்களில் பணிபுரிந்ததும், குறுகிய காலத்தில் குறுக்கு வழியில் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான நுணுக்கங்களை அங்கிருந்து பயின்றதும் தெரியவந்தது.

சாகர் தாக்கர் கைது

இதனிடையே, முக்கிய குற்றவாளியான சாகர் தாக்கர் துபாய் தப்பியோடிவிட்டார். இந்த நிலையில், அவர் துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பை வருவதாக விமான நிலைய குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்போது, துபாயில் இருந்து வந்த விமானத்தில் சாகர் தாக்கர் வந்தார்.

அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முயன்றபோது, அவரை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவரது பாஸ்போர்ட், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், போலீசார் விரைந்து வந்து சாகர் தாக்கரை கைது செய்து தானே கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை வருகிற 13–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்தார்.

ஆடம்பர வாழ்க்கை

வெறும் 24 வயதே ஆன சாகர் தாக்கர், ஆடம்பர வாழ்க்கையில் மிகவும் நாட்டம் கொண்டவர் ஆவார். மேலும் இரவு நேர விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும், வித விதமான சொகுசு கார்களை பயன்படுத்துவதிலும் அவருக்கு அலாதி பிரியம். சமீபத்தில், அவர் பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்றின் மதிப்பு ரூ.2½ கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story