உத்தவ் தாக்கரேயுடன் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. சந்திப்பு


உத்தவ் தாக்கரேயுடன் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. சந்திப்பு
x
தினத்தந்தி 8 April 2017 8:25 PM GMT (Updated: 8 April 2017 8:25 PM GMT)

ரவீந்திர கெய்க்வாட் எம்.பி., நேற்று மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து விளக்கம் அளித்தார்.

மும்பை,

ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரியை செருப்பால் அடித்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்திர கெய்க்வாட் எம்.பி., நேற்று மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து விளக்கம் அளித்தார்.

ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.


உஸ்மனாபாத் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திர கெய்க்வாட், கடந்த மாதம் 23-ந் தேதி புனேயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, விமானத்தில் தான் விரும்பிய இருக்கை கிடைக்காத ஆத்திரத்தில், விமான நிறுவன மேலாளர் சுகுமார் (வயது 60) என்பவரை செருப்பால் 25 முறை அடித்தார். அவரது சட்டையையும் கிழித்தார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. விமானங்களில் பறக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் தடை விதித்தது. இதேபோல், தனியார் விமான சேவை நிறுவனங்களும் தடை விதித்தன.

தடை வாபஸ்

இப்பிரச்சினை விசுவரூபம் எடுத்த நிலையில் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி., நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய மந்திரியின் உத்தரவின்பேரில், அவருக்கு விதித்த தடையை ஏர் இந்தியா வாபஸ் பெற்றது.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், இண்டிகா ஆகிய தனியார் விமான சேவை நிறுவனங்கள் அடங்கிய இந்திய சிவில் விமான போக்குவரத்து கூட்டமைப்பும் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.க்கு விதித்த தடையை நேற்று திரும்ப பெற்றன.

“எங்களுடைய ஊழியர்களுக்கும், சொத்துகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சிவசேனா எம்.பி. மீது பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது” என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

உத்தவ் தாக்கரேயுடன் சந்திப்பு


விமானத்தில் பறக்க தடை நீக்கப்பட்ட போதிலும், 56 வயது எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், நேற்று முன்தினம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லியில் இருந்து மும்பை திரும்பினார். இதையடுத்து, நேற்று மும்பை தாதரில் உள்ள சிவசேனா தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடம் நீடித்தது.

அப்போது, நடந்த சம்பவம் குறித்து உத்தவ் தாக்கரேயிடம் அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. எனினும், இது குறித்து நிருபர்களிடம் கருத்து தெரிவிக்க உத்தவ் தாக்கரேயும், ரவீந்திர கெய்க்வாட்டும் மறுத்துவிட்டனர்.

Next Story