ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசாரை கைது செய்தனர்.
உப்பள்ளி,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசாரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனர்.
கிரிக்கெட் சூதாட்டம்ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 5–ந்தேதி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடந்து வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கி உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். அதே வேளையில் கிரிக்கெட் சூதாட்ட தரகர்களும் தங்களது வேலையை தொடங்கி உள்ளனர். ஒரு ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்பதில் தொடங்கி, சூதாட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கர்நாடகத்தில் சூதாட்டத்தின் மையப்பகுதியாக உப்பள்ளி விளங்குகிறது. இங்கு ஏராளமான இடங்களில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருகிறது. உப்பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, இந்த ஆண்டும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கியவுடன் உப்பள்ளியில் சூதாட்டமும் தொடங்கி உள்ளது.
2 பேர் கைதுஇந்த நிலையில் கடந்த 6–ந்தேதி இரவு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை–புனே அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தை மையமாக வைத்து உப்பள்ளி எம்.டி. மில் மைதானம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக மாநகர துணை போலீஸ் கமிஷனர் அர்ஜூனா பாலதண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அவருடைய தலைமையிலான போலீசார் எம்.டி. மில் மைதானம் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அந்தப்பகுதியில் ஒரு வீட்டில் டி.வி.யை பார்த்தப்படி 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அந்த சமயத்தில் போலீசாரை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கேசுவாப்பூர் பியர்ல் லே–அவுட்டை சேர்ந்த கஜனன் கத்தாரே (வயது 44), மூன்றாயிரம் மடம் பகுதியை சேர்ந்த அனுமாசாகர் (22) ஆகியோர் என்பதும், டி.வி.யில். கிரிக்கெட் போட்டியை பார்த்தப்படி சூதாட்ட தரகர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம், 13 செல்போன்கள், ஒரு டி.வி., ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ் விசாரணைஇதுகுறித்து உப்பள்ளி உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூதாட்டத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?, இவர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது யார்–யார்? என்பது குறித்து கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை உப்பள்ளி–தார்வார் மாநகர போலீஸ் கமிஷனர் பாண்டுரங்க ராணே நிருபர்களுடன் தெரிவித்தார்.