சிவசேனா எம்.பி.க்கு தடை விவகாரம்: தனியார் விமான நிறுவனங்களின் உத்தரவும் வாபஸ்


சிவசேனா எம்.பி.க்கு தடை விவகாரம்: தனியார் விமான நிறுவனங்களின் உத்தரவும் வாபஸ்
x
தினத்தந்தி 8 April 2017 11:20 PM GMT (Updated: 2017-04-09T04:49:48+05:30)

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், டெல்லியில் ஏர் இந்தியா நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த விவகாரத்தை தொடர்ந்து அவரை தங்களது விமானங்களில் பறக்க அனுமதிப்பதில்லை என்று ஏர் இந்தியா அறிவித்தது.

மும்பை,

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், டெல்லியில் ஏர் இந்தியா நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த விவகாரத்தை தொடர்ந்து அவரை தங்களது விமானங்களில் பறக்க அனுமதிப்பதில்லை என்று ஏர் இந்தியா அறிவித்தது. இதேபோல் தனியார் விமான சேவை நிறுவனங்களும் அறிவித்தன.

இப்பிரச்சினை விசுவரூபம் எடுத்த நிலையில் ரவீந்திர கெய்க்வாட் 2 நாட்களுக்கு முன்பு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து மத்திய மந்திரியின் உத்தரவின்பேரில் சிவசேனா எம்.பி.க்கு விதித்த தடையை ஏர் இந்தியா வாபஸ் பெற்றது.

இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், இண்டிகா ஆகிய தனியார் விமான சேவை நிறுவனங்கள் அடங்கிய இந்திய சிவில் விமான போக்குவரத்து கூட்டமைப்பும் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி.க்கு விதித்த தடையை நேற்று திரும்ப பெற்றன.

‘‘எங்களுடைய ஊழியர்களுக்கும், சொத்துகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சிவசேனா எம்.பி. மீது பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது’’ என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story