தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றுவது இல்லை


தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றுவது இல்லை
x
தினத்தந்தி 8 April 2017 11:24 PM GMT (Updated: 2017-04-09T04:54:17+05:30)

தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றுவது இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறினார்.

புதுடெல்லி,

தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றுவது இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறினார்.

கருத்தரங்கு

‘தேர்தல் பிரச்சினைகள் தொடர்பான பொருளாதார சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் டெல்லியில் நேற்று கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பேசுகையில் கூறியதாவது:–

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகள் மூலம் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால் அந்த தேர்தல் அறிக்கைகள் வெறும் காகிதங்களாகவே இருக்கின்றன. தேர்தலின் போது அளிக்கும் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றுவது இல்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு கட்சியில் கருத்து ஒற்றுமை ஏற்படாததே காரணம் என்று கூறி கட்சிகள் தங்கள் செயல்பாட்டை நியாயப்படுத்துகின்றன. அளிக்கப்படும் வாக்குறுதிகளுக்கு கட்சிகளை பொறுப்பேற்க செய்யவேண்டும்.

கடந்த 2014–ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தேர்தல் சீர்திருத்தங்களுக்கும், பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூக–பொருளாதார நீதி கிடைப்பதை அரசியல் சாசனம் உறுதி செய்வதற்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த கட்சியும் தெரிவிக்கவில்லை.

இலவசங்கள்

வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடக்கும் கட்சிகள் மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறினார்.

நீதிபதி தீபக் மிஸ்ரா பேசுகையில், தேர்தல் சீர்திருத்தங்களை அமல்படுத்துவது அவசியம் என்றும், அதிகாரத்தை விலை கொடுத்து வாங்குவதற்காக தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்றும், தேர்தலில் போட்டியிடுவது முதலீடு போன்றது அல்ல என்பதை வேட்பாளர்கள் தங்கள் மனதில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.


Next Story