சத்தீஷ்காரில் தன் கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்


சத்தீஷ்காரில் தன் கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர்
x
தினத்தந்தி 9 April 2017 4:36 AM GMT (Updated: 9 April 2017 4:36 AM GMT)

சத்தீஷ்காரில் தன் கணவர் இறந்த செய்தியை, செய்தி வாசிப்பாளர் ஒருவர் பிரேக்கிங் செய்தியாக படித்த சம்பவம் நடந்து உள்ளது.

ராய்பூர்,

சத்தீஷ்காரின் ஐபிசி 24 எனும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் சுப்ரீத் கவுர். இவருக்கும் ஹர்ஷாத் கவடே என்பவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் ராய்ப்பூரில் வசித்து வந்தனர். நேற்று (08.04.17) காலை கவுர் செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போது, பிரேக்கிங் செய்தி வந்துள்ளது. தொலைபேசியில் பேசி செய்தியாளர் ரெனால்ட் டஸ்டர் வாகனம் ஒன்று விபத்திற்கு உள்ளாகி உள்ளது என்றும் அதில் பயணித்த ஐவரில் மூவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறிஉள்ளார். மகாசாமுந்த் மாவட்டம் பிதாரா பகுதியில் விபத்து நேரிட்டதாக செய்தியாளர் கூறியதும் தன் கணவர் பயணித்ததை தெரிந்த கொண்டார். 

அவ்வழியாக தன்னுடைய கணவர் அவருடன் பணிபுரிவர்களுடன் செல்லுவது வழக்கம் என்பது கவுருக்கு தெரியும். தொலைபேசியில் பேசிய செய்தியாளருக்கு உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாது. ஆனால் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல், செய்தி முடிந்ததும் வெளியே வந்து கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக அவருடன் பணியாற்றும் மற்றொரு செய்தியாளர் பேசுகையில், “கவுர் மிகவும் தைரியமான பெண், அவரை எங்களுடைய செய்தி வாசிப்பாளராக கொண்டு உள்ளதில் பெருமை கொள்கிறோம், எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,” என்று கூறிஉள்ளார். 

தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் பேசுகையில், கவுர் செய்தி வாசித்துவிட்டு வெளியே வந்ததும் அவர் உறவினர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரத்தொடங்கியது. கவுர் அந்த செய்தியை வாசிக்கும் போதே அவர் கணவர் இறந்துவிட்டார். ஆனால் நாங்கள் அதை அவரிடம் அப்போது சொல்லவில்லை, ஏனென்றால் அவ்வளவு தைரியம் எங்களுக்கு இல்லை என்று கூறினார்.

Next Story