ஸ்ரீநகரில் வாக்குச்சாவடிகளை தாக்கிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு ஐவர் உயிரிழப்பு


ஸ்ரீநகரில் வாக்குச்சாவடிகளை தாக்கிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு ஐவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 April 2017 10:42 AM GMT (Updated: 2017-04-09T16:12:06+05:30)

ஸ்ரீநகரில் வாக்குச்சாவடிகள் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் கடந்த வருடம் பயங்கரவாதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆளும் கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியின் ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஹமீத் கார்ரா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஸ்ரீநகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை காரணமாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது, இணையதள சேவை முடக்கப்பட்டது. 

ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீநகர், பாத்காம் மற்றும் கந்தர்பாலுக்கு விடுமுறை என அம்மாநில அரசும் அறிவித்தது. ஏற்கனவே பிரிவினைவாதிகள் தரப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது, தேர்தலை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இன்று வாக்குப்பதிவு தொடங்கியதுமே பல்வேறு பகுதிகளில் வன்முறை கும்பல்களால் பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டனர். தொகுதியில் வாக்குச்சாவடிகள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் திட்டமிட்டு வாக்குச்சாவடிகளை தாக்கினர்.

பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர் என்றும் அவர்களுக்கு பெல்லட் துப்பாக்கிகள் வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் சிறார்களை கேடயமாக பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தாக்குதலை முன்னெடுத்து உள்ளனர். 

பாராளுமன்றத் தொகுதியில் பிற்பகல் 2 மணிவரையில் வெறும் 5.52 சதவித வாக்குகளே பதிவாகி உள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story