இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்களை எதிர்கொள்ள புதிய இணையதளம்

வெளிநாடுகளில் இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்களை எதிர்கொள்ள மத்திய அரசின் ஊடக பிரிவான பிரச்சார் பாரதி புதிய இணையதளம் ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி,
வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் இந்தியாவைப்பற்றிய தவறான, எதிர்மறையான கருத்துக்களுக்கு மாற்றாக இந்த இணையதளம் வெளிநாட்டு குடிமக்களுக்கு இந்தியாவின் பார்வையில் நாட்டின் பிரச்சினைகளை எடுத்து சொல்லும் என்று பிரசார் பாரதி சொல்கிறது.
தற்போது பிரசார் பாரதியின் கீழ் தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் இனி இப்புதிய இணையதளமும் இயங்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் பிரசார் பாரதிக்கு கொடுக்கப்பட்ட ஓர் அறிக்கையின் அடிப்படையிலேயே இணையதளத்தை தோற்றுவிக்கும் யோசனை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த அறிக்கை தற்போது தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பிரசார் பாரதியின் தலைவர் சூரிய பிரகாஷின் தலைமையிலான பல உயர் அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட குழுவால் இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ”இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகும். நிர்வாக விஷயங்களில் பெரிய அளவில் செயல்பாடுகள் மாறியுள்ளன. இந்த நடவடிக்கைகள் பல அரசுகளுக்கு முன்மாதிரியாக இருக்கக்கூடியவை. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவை மோதல் அதிகமுள்ள பிரதேசமாக சித்தரிக்கின்றன. உண்மையற்ற அத்தகவல்களை எதிர்கொள்ளவே இணையதளம் துவங்கப்படுகிறது” என்றார் சூரிய பிரகாஷ்.
இந்த இணையதளம் குறிப்பாக கொள்கை வகுப்பாளர்களுக்கும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் உதவிகரமாக செயல்படும் எனப்படுகிறது. தளத்தில் உலக பொருளாதாரம், புவி அரசியல், பயங்கரவாதம், உலக சிக்கல்கள் போன்ற விஷயங்களை பற்றி ஆழமான கட்டுரைகள் இடம் பெறும். ஆண்டுதோறும் ரூ.75 கோடி செலவில் இத்தளம் செயல்பட வழி செய்யப்படும். வணிக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இந்த இணையதளம் பதிவு செய்யப்படும்.
இத்தளத்தில் கட்டுரைகளுடன் பலவிதமான நிகழ்ச்சிகளையும் இணைத்து பார்வையாளர்களை கவர வசதி செய்யப்படும். பல பிரபலமான நெறியாளர்கள் இந்நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்கள். துவக்கத்தில் ஆங்கிலத்தில் செயல்படும் இத்தளம் பின்னர் ஸ்பானிஷ் மற்றும் சீனம் போன்ற மொழிகளிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியிலும் பல லட்சம் பேர் பார்வையிடவும், தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அறியவும் கூட கூர்மையாக கவனம் செலுத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.
Next Story